Offering prayers at Tirupati for the Tamil Nadu Agriculture Budget: TVK Minister embroiled in controversy  google
தமிழ்நாடு

தமிழக வேளாண் பட்ஜெட்டை திருப்பதியில் வைத்து வழிபாடு : சர்ச்சையில் சிக்கிய தவெக அமைச்சர் : வலுக்கும் கண்டனங்கள்!

திருப்பதி கோயிலில் தமிழக வேளாண் பட்ஜெட் ஆவணங்களை வைத்து பூஜை செய்த அமைச்சர் வினோத்திற்கு வலுக்கும் கண்டனம்

Kavitha prasanna

Offering prayers at Tirupati for the Tamil Nadu Agriculture Budget: TVK Minister embroiled in controversy

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் வினோத் வழிபாடு செய்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 6- ல் வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற தமிழக வேளாண் அமைச்சர் வினோத், அரசின் நிதிநிலை ஆவணங்களை திருப்பதிக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தார்.

இதைத்தொடர்ந்து அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை வேறு மாநிலத்திற்கு எடுத்து சென்றதற்காகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது.

"பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படி செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியலமைப்புச் சாசன ஆவணம்.

தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசின் அரசியலமைப்பு ஆவணங்களைக் காணிக்கையாக்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயலாகும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது"

இதனிடையே, இச்சம்பவத்திற்கு அ.தி.மு.க தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், "பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்தவொரு பொதுவெளியிலும் வைக்கப்படக் கூடாது.

ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று திருப்பதியில் வைத்துப் பூஜை செய்துள்ளார் வேளாண்மைத்துறை அமைச்சர்.

அ.தி.மு.க. கேள்வி

பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடமிருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது சட்டப்படி குற்றமில்லையா? ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும், சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?" என்று அ.தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது.

=====