இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறை வெறியாட்டமும், அடக்குமுறையும், சட்ட விரோதச் செயல்களும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன.
காவல் நிலைய மரணங்கள் :
சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன், சென்னை சேர்ந்த விக்னேஷ், திருப்புவனம் அஜித் குமார் என இதுவரை 25 பேர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ரமேஷ் ஜனவரி மாதம், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக விசாரணை அழைத்து செல்லப்பட்டார். அவர் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதும், அவர் காவலர் காலில் விழுந்து கெஞ்சுவதும் சிசிடிவியில் பதிவாகி, தற்போது வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தால், அது நியாயமாக நடைபெறவும், தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட ரமேஷுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையின் அத்துமீறல் :
குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தருவதுதான் காவல் துறையினரின் கடமையே தவிர, அவர்களின் உயிரை பறிப்பது அல்ல. இதுபோன்ற செயல்களை காவல் துறையினர் தன்னிச்சையாக செய்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன
நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றன. இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதே தெரியாத ஒரு நிலை உருவாகி விட்டது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? :
பொதுமக்கள் மீது காவல் துறையினரின் கொடூரத் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று வெளிவராத நிகழ்வுகள் எத்தனை என்று தெரியவில்லை. மக்களை வாழவைப்பதற்குத்தான் ஆட்சியே தவிர, மக்களின் உயிர்களை பறிப்பதற்கு அல்ல. தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மூலம் கொடூரக் காட்சிகள் நிறைந்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்பது நிரூபணமாகி உள்ளது” என அவர் எச்சரித்துள்ளார்.
====