Low-Pressure System Over Bay of Bengal Set to Intensify; Heavy Rain Alert for Tamil Nadu Google
தமிழ்நாடு

வங்க கடலில் உருவாகும் புதிய புயல்! : 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு – தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

NARENDRAN K

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது :

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நன்கு வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.

இதையடுத்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2-ம் தேதி ஆந்திர கடற்கரை அருகே நகரும்!

புயலாக வலுப்பெறும் இந்த வானிலை அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ம் தேதி மாலை ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு அருகே மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது எங்கு கரையைக் கடக்கும் என்பது குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு :

இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நவம்பர் 1-ம் தேதி சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், நவம்பர் 2-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

வங்கக் கடலின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தமான் கடல், வங்கக் கடல் மற்றும் ஆந்திரா, வடதமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

====================