P. Shanmugam stated that Marxist rejected the idea of ​​forming government with the support of AIADMK-DMK alliance google
தமிழ்நாடு

திமுக - அதிமுக கூட்டு சந்தர்ப்பவாதம், CPM நிராகரிப்பு! : TVKவுக்கு ஆதரவு ஏன்? : பரபரப்பை கிளப்பிய பெ.சண்முகம் அறிக்கை.!

அதிமுக - திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்ததாக, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

தவெக அரசு - கம்யூனிஸ்ட்கள் ஆதரவு

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தவெக அரசுக்கு வெளியில் இருந்து இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரண்டு கட்சிகளும் தலா 2 எம்எல்ஏக்கள் இருந்தாலும், ஆட்சியில் பங்குபெற விரும்பவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்ததற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர்...

விமர்சிக்கும் திமுக அறிவுஜீவிகள்

”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவைச் சார்ந்தவர்களும், திமுக ஆதரவு அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்து வருகின்றனர்.

சிபிஎம்-க்கு மூன்று வாய்ப்புகள்

சிபிஐ(எம்) முன்னால் மூன்று வாய்ப்புகள் இருந்தன. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.

எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவுமில்லை. மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.

ஜனாதிபதி ஆட்சியை விரும்பவில்லை

குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் அனுமதிக்கக் கூடாது? உடனடியாக மற்றொரு சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தேர்தலை அனுமதிப்பதா இல்லையா என்பதும் ஒன்றிய பாஜக அரசின் கையில்தான்.

ஆளுநர் மூலமாக தாங்களே நேரடியாக ஆட்சி நடத்த ஒரு வாய்ப்பு வரும்போது நிச்சயமாக அதை அவர்கள் தவற விடமாட்டார்கள்.

பாஜக தோல்வியே நோக்கம்

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய நோக்கமும் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.

ஜனாதிபதி ஆட்சி வந்தால் ஆபத்து

குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வழிவகுப்பது மேற்கண்ட அரசியல் நிலைபாட்டிற்கு எதிரானதாகும். பிறகு, தேர்தல் நடந்தாலும் அது ஒன்றிய பாஜக ஆட்சி யின் கட்டுப்பாட்டில்தான் நடக்கும் சூழல் இருக்கும்.

எனவே, எக்காரணங்கொண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம்.

108 இடங்களில் தவெக வெற்றி

இந்தத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றுள்ளது. சட்டப்படியும் முதல் வாய்ப்பு இந்தக் கட்சிக்கே உள்ளது. ஏறத்தாழ 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

ஆட்சி மாற்றம் - மக்கள் விருப்பம்

இது ‘ஆட்சி மாற்றம்’ - அதாவது திமுக - அதிமுக அல்லாத ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று இரண்டு இடதுசாரி கட்சிகளும் தீர்மானித்தன.

பொறுப்பை சரியாக நிறைவேற்றினோம்

யார் ஆட்சி அமைத்தாலும் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் நிலைமை.

எனவே, இந்த மிக முக்கிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் கட்சி இதை அணுகியது.

அதிமுக திமுக கூட்டு நிராகரிப்பு

அதிமுக ஆட்சி அமைப்பது - திமுக ஆதரிப்பது. அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.

இந்தத் தேர்தலின் மையமான அம்சமே பாஜக - அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். மக்களும் தோற்க டித்திருக்கிறார்கள்.

அதிமுக அரியணை ஏறுவது சந்தர்ப்பவாதம்

தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக - திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது” என்று அந்த அறிக்கையில் பெ. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

========================