அதிமுக சார்பில் மனு
Pallikaranai Marshland Case Update in Tamil : சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.தொடர்ந்து சதுப்பு நிலங்களில் சிலர் முறையை மீறி குடியிருப்பு கட்டி வருவாதாகவும் தகவல்கள் வெளியாகின.
மனு விசாரணை
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது , மனுதாரர் தரப்பில், 1,400 குடியிருப்புகளை சதுப்பு நிலப் பகுதியில் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியது சட்டவிரோதம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானமும் செய்யக் கூடாது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிபதி சரமாரி கேள்வி
இதனைக் கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு தெரியாமல், சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி தந்தது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
குடியிருப்பு கட்ட தடை விதித்த நீதிமன்றம்
குடியிருப்புகள் கட்ட சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அனுமதி கிடைத்ததால்தான், சிஎம்டிஏ அனுமதி வழங்கியதாகவும், சதுப்பு நில எல்லையைத் துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வுப் பணிகள் 2 வாரத்தில் முடியும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு நவம்பர் 12ஆம் தேதிக்குள் மத்திய அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்புகள் கட்டவும் தடை விதித்துள்ளது.
சென்னையை காக்கும் பள்ளிக்கரணை
மழைக் காலங்களில், சென்னையை பெரும் வெள்ளத்திலிருந்து தடுக்கும் முக்கிய வடிகால் பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகள் என்றும், இங்கு அதிக வெள்ளம் தேங்காத வகையிலும், ஈரப்பதம் குறைந்து வறண்டு போகாத வகையிலும் பாதுகாப்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுநல மனு
முன்னதாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், குப்பைகள் கொட்டுவதால் ஏற்கெனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம்(Pallikaranai Marshland) பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மை அளிக்கும் சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : பாஜக வெளியிட்டுள்ள பகீர் அறிக்கை- ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி!
எல்லையை மீறி தமிழக அரச அனுமதி
மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. அதேவேளையில், சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான அனுமதி கொடுத்த பகுதி, ராம்சா் தலம் இல்லை என்று தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
======