Passing of legendary director Bharathiraja: PM Modi offers heartfelt condolences; funeral to take place this afternoon.
திரையுலகின் ஜாம்பவான் ...இயக்குநர் இமையம்
திரையுலகின் ஜாம்பவான்..என்றும் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் முதன்மையானவரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 84.
திரையுலகில் ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் அஞ்சலி
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தியைக் கேட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறையினரும் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய கலைஞர்கள்
இவர்களுடன் இணைந்து இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த கலைஞர்கள், அவர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் ராதா, ரேவதி, ராதிகா, கார்த்திக் என ஒட்டுமொத்த கலைஞர்களும், இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இழப்பு ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் அவரது இழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாஎ.
"தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்தவர்" – பிரதமர் மோடி புகழாரம்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார்.
குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.”
என தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
வத்தலகுண்டு அருகே இன்று பிற்பகல் உடல் அடக்கம்
சென்னை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிராஜாவின் இறுதி விருப்பத்தின்படி, நேற்று இரவே அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது சொந்தப் பண்ணைத் தோட்டத்தில், இன்று (ஜூன் 11) பிற்பகல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
=====