people from Tamil Nadu will not be allowed to attend public meeting to be held in Puducherry under Vijay tomorrow Google
தமிழ்நாடு

புதுச்சேரி ”தவெக பொதுக்கூட்டம்” யாருக்கு அனுமதி? : புஸ்ஸி ஆனந்த்

TVK Vijay Meeting Schedule in Pondicherry : புதுச்சேரியில் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

தவெக பிரசார கூட்டம்

TVK Vijay Meeting Schedule in Pondicherry : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டம் எதையும் நடத்தவில்லை. கரூரில் 41 பேர் பலியானதால், காவல்துறையும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதால், கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரோடு ஷோவிற்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டம்

இந்தநிலையில், புதுச்சேரியில் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியது. ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்த புதுச்சேரி அரசு, விஜய் தலைமையில் பொதுக் கூட்டம் நடத்த ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அந்த வகையில், உப்பளம் பகுதியில் நாளை காலை 10.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு, அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள்

இந்தநிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தவெக தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார் அதன்படி, “ நாளை (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற உள்ளது.

5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி

காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரியை சேர்ந்த, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சியினரும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் பாதுகாப்பே முக்கியம்

தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர் தவெக தலைவர் விஜய். எனவே அவரது புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத்தினரும், பொதுமக்களும் சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

பெண்கள், முதியவர்கள் வரவேண்டாம்

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் காணுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாகனங்களில் பின்தொடர வேண்டாம்

தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்க

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத்தினர் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மரங்கள், மின்கம்பங்கள் மீது ஏறக்கூடாது

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், மதில் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது.

மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும். பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

========================