permission granted to operate trains on Poonamallee–Vadapalani Metro corridor, caused dissatisfaction among the public google
தமிழ்நாடு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை : எதிர்பார்ப்பில் மக்கள் : எப்போது தொடங்கும்? : மத்திய, மாநில அரசுகள் மவுனம்...?

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்ட பிறகும், தொடக்க விழா நடத்தாலம் இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது.

Kannan

சென்னையில் மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆவது கட்டமான முக்கியப் பகுதி, மக்கள் பயன்பாட்டிற்கு வரத் தயாராகி காத்துக் கிடக்கிறது.

தயார்நிலையில் பூந்தமல்லி-வடபழனி தடம்

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.6 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில், எப்போது வேண்டுமானாலும் பொதுப் போக்குவரத்தைத் தொடங்கலாம் எனத் தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ரயில்களை இயக்குவதற்கான இறுதி ஒப்புதல் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்துவிட்டது.

அனுமதி வழங்கி பல மாதம்...

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) இந்த வழித்தடத்திற்குச் சில நிபந்தனைகளுடன் தற்காலிக அனுமதியை மட்டுமே தந்திருந்தார்.

10 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

இதனால், பூந்தமல்லி - போரூர் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என்ற சூழல் இருந்தது.

ஆனால், தற்போது நிபந்தனைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு முழு அனுமதி கிடைத்துள்ளதால், இனி 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வழியமைக்கப்பட்டுள்ளது.

இறுதி அனுமதி வழங்கல்

மே 23, 24 ஆகிய தேதிகளில் இந்த தடத்தில் 5வது பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

ரயில் நிலையங்கள், தண்டவாள பாதைகள் அனைத்தும் திருப்திகரமாக இருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி அனுமதி வழங்கப்பட்டது.

பூந்தமல்லி - போரூர் இடையே எவ்வித வேகக் கட்டுப்பாடும் இல்லை. அதேபோல, போரூர் முதல் வடபழனி வரையிலான தடத்தில் ரயில்களின் வேகம் மணிக்கு 25 கி.மீட்டரிலிருந்து 40 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போரூர் வரை ரயில் நிலையங்கள்

பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், காரஞ்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய ஸ்டேஷன்களில் ரயில்கள் வழக்கம்போல் நின்று செல்லும்.

6 நிலையங்கள் முழுமையடையவில்லை

போரூர் சந்திப்பைத் தாண்டியதும், ரயில்கள் இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாக வடபழனிக்குச் சென்றுவிடும். காரணம் என்ன? ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு மற்றும் சாலிகிராமம் ஆகிய இடைப்பட்ட 6 நிலையங்களின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததே இதற்குக் காரணம்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். நிறைய கல்லூரிகள் இருக்கின்றன.

வணிக வளாகங்களும் அதிகமாக இருப்பதால், மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பூந்தமல்லி மெட்ரோ தொடங்குவதற்கு எல்லாமே ரெடியாக இருக்கும் போதிலும் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது என்பது குறித்து தேதி அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து மெட்ரோ அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், 6 ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்ததும் உடனே சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

=================================