4 - வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையைத் தொடர்ந்து நிர்ணயம் செய்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அண்மைக் காலமாக அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இழப்பு
சமீபத்திய பொருளாதார ஆய்வு அறிக்கைகளின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு விற்பனை மூலம் இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்குத் தினமும் சுமார் ரூ. 1,380 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கை
இந்த இமாலய இழப்பைச் சமநிலைப்படுத்துவதற்காக, மத்திய அரசு தற்போது எரிபொருள் விலையைப் படிப்படியாக உயர்த்தி வருகிறது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடும் மாற்று இறக்குமதியும்
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடங்கிய போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணையை' ஈரான் முடக்கியது.
கூடுதல் விலை கொடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்த அசாதாரண சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, இந்திய அரசு நிறுவனங்கள் ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.
லி. ரூ.25 வரை உயர வாய்ப்பா? வல்லுநர்கள் கணிப்பு
இதன்காரணமாக சென்ற வாரமே எரிபொருள் விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட போதிலும், அது எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூட்டு ஆய்வறிக்கையின்படி
'நேமுரா' மற்றும் 'எலாரா கேபிடல்' ஆகிய நிறுவனங்களின் கூட்டு ஆய்வு அறிக்கையின்படி, நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பைச் சரிகட்ட வேண்டும் என்றால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்த்த வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே, தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைப் படிப்படியாக உயர்த்தி வருகிறது.
சென்னையில் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தற்போது 4-வது முறையாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வாரக் காலத்திற்குள் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு சுமார் ரூ. 7.50 காசுகள் வரை விலை அதிகரித்துள்ளது.
புதிய விலை உயர்வின்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.46 உயர்ந்து ரூ. 107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.57 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.55-க்கு விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் இந்த விலை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு
இருப்பினும், தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் குறைந்து, போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி விரைவில் எரிபொருள் விலை நிலைநிறுத்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
=====