Ramadoss accused Anbumani of being responsible for any attack on PMK cadres Ahead Of MLA Arul Attack Google
தமிழ்நாடு

”பாமகவினர் மீது சுண்டுவிரல் பட்டாலும்!” : அன்புமணிக்கு எச்சரிக்கை

Ramadoss Slams Anbumani on PMK MLA Arul Attack : பாமகவினர் மீது சுண்டுவிரல் பட்டாலும் அதற்கு அன்பமணியே பொறுப்பு என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Kannan

இரு பிரிவுகளாக பாமக

Ramadoss Slams Anbumani on PMK MLA Arul Attack : பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி, கட்சியை இரண்டாக பிரித்து இருக்கிறது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தி அடைந்து இருக்கிறார்கள்.

செயல் தலைவர் ஸ்ரீகாந்தி

தனது மகள் ஸ்ரீகாந்தியை பாமக செயல் தலைவராக நியமித்து அன்புமணி தரப்பை ஓரம் காட்டி இருக்கிறார் ராமதாஸ். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் அடிப்படையில், அன்புமணி அதிகாரம் மிக்கவராக இருக்கிறார்.

அன்புமணியை அமைச்சராக்கிறது தவறு

இந்தநிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் டாக்டர் ராமதாஸ். “ ”நான் சில தவறுகளை செய்தது உண்டு. அதில் ஒன்றுதான் அன்புமணியை மத்திய அமைச்சராக நியமித்தது, கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்தது. நான் அமைதியாக கட்சியை நடத்தி கொண்டிருக்கும் போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது என அனைவரும் நினைக்கும் வகையில் அவர்களின் செயல் அருவருக்கதக்க வகையில் இருக்கிறது. உங்கள் வளர்ப்பு சரி இல்லை என சொல்கிறார்கள்.

என்னை அவதூறு பேசுவதா?

அந்த கும்பலில் உள்ளவர்கள் எல்லோருமே நான் வளர்த்த பிள்ளைகள் தான். என்னை அன்போடு அய்யா என அழைத்தவர்கள் தான். ஒரு சில காரணங்களால் இப்போது அந்த கும்பலிடம் சென்று அவர்களின் அறிவுரைப்படி என்னை திட்டி கொண்டிருக்கிறார்கள். என்னோடு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது 2 பேர் தான் என்னோடு இருக்கிறார்கள். மீதம் 3 பேர் அன்புமணியோடு போய் விட்டார்கள்.

எத்தனை பிரதமர்களை சந்தித்து இருப்பார். கூட்டணி அமைத்திருப்பார். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் பலரோடு கூட்டணி வைத்தேன். யாரும் என்னை பற்றி அவதூறாக விமர்சனம் செய்தது இல்லை. பலரும் என்னை பாராட்டி இருக்கிறார்கள்.

போராட்டங்களை முன் நின்று நடத்தியவன்

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கூட பிரதமர் என்னை ஆரத்தழுவி பாராட்டினார். இப்படி 46 ஆண்டு காலம்பாசத்தோடு பழகியவன். பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி இருக்கிறேன்.

என்னை எதிர்த்தவர்களுக்கு நாகரீகமாக பதிலடி கொடுப்போம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களாக இருந்த நிலையில் இப்போது 38 மாவட்டங்களாக உயர்ந்திருப்பதற்கு நான் தான் காரணம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன்.

அடிதடியில் அன்புமணி தரப்பு

ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் சேர்த்து கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அடிதடி செய்கிறார்கள். அந்த கும்பல் இன்னும் துப்பாக்கியை தான் பயன்படுத்த வில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள். இதனை தான் அன்புமணி decent and development politics என்று இவ்வளவு நாளாக சொல்லி வந்தாரா என தெரியவில்லை.

எனது ஆதரவாளர்களை மிரட்டுவதா?

சேலத்தில் துக்கம் விசாரிக்க சென்ற எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்கள். நல்ல வேளையாக அவர் தப்பி பிழைத்துள்ளார். ஆனால் 12 கார்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசைக்காட்டி சில பேரை இழுத்து தன் வசம் வைத்து கொண்டு என்னையும், என்னோடு இருப்பவர்களையும் மிரட்டி வருகின்றனர்” என்றார்.

தனிக்கட்சி தொடங்கு ’அன்புமணி’

தொடர்ந்து அன்புமணியை கடுமையாக விமர்சித்த அவர், “உனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள். பாமக பெயரையோ, என் பெயரையோ பயன்படுத்த கூடாது. ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து கொள். அந்த கட்சிக்கு பெயர் வேண்டும் என்றால் நல்ல பொருத்தமான பெயரை நான் சொல்கிறேன். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், மறைந்த தலைவர்களும் விரும்பினார்கள். இப்படி கத்தி, கபடா வைத்து கொண்டு அரசியல் செய்வது தான் நாகரீகமான அரசியலா..?

சுண்டுவிரல் பட்டாலும்? எச்சரிக்கை

இனிமேல் என்னுடைய கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணியும், அவரது மனைவி செளமியாவும் தான் காரணம். அன்புமணியும் அவருடன் இருக்கும் அந்த கும்பலும் திருந்த வேண்டும். டிசம்பர் மாதம் 30ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், யாரோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” இவ்வாறு ராமதாஸ் பேட்டியளித்தார்.

===================