பாமகவில் நிலவும் மோதல்
PMK Leader Ramadoss Daughter As PMK Working President : தமிழகத்தில் பிரதான கட்சிகளில் ஒன்றான பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பெரும் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது செயல் தலைவர் பதவி வரை கொண்டு வந்து இருக்கிறது.
ராமதாஸ் நோட்டீஸ் - அன்புமணி மவுனம்
கட்சியில் நியமனம், நீக்கத்தில் தொடங்கிய பனிப்போர், தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு வரை சென்றது. பொதுக்குழுவை கூட்டி தன்னை தலைவராக அறிவித்தார் அன்புமணி, அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் ராமதாஸ். ஆனால், அன்புமணி தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவிலை. பலமுறை இறுதி வாய்ப்பு கொடுத்தும் அன்புமணி கண்டுகொள்ளவில்லை.
சட்டமன்றத்திலும் மோதல் போக்கு
சட்டமன்ற பாமக தலைவர் பதவி தொடர்பாகவும் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வெடித்தது. தற்போது தலைவராக இருக்கும் ஜி.கே. மணியை நீக்க வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக நிற்கிறார். ஏன் என்றால், அவர் ராமதாஸ் ஆதரவாளராக இருப்பது தான்.
பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி
இந்தநிலையில், தருமபுரியில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாமகவின் செயல் தலைவர் பொறுப்பில் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார் ராமதாஸ். நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே உரையாற்றிய அவர், தனக்கும் கட்சிக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்று தெரிவித்தார்.
செயல் தலைவர் - அன்புமணி நீக்கம்
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக பல முறை கெடு விதித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி இருப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
என்ன செய்வார் அன்புமணி?
செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டு இருக்கும் நிலையில், பாமகவின் தலைவர் என்ற அடிப்படையில் அவர் செயல்பட்டு வருகிறார். பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் அவர் தலைமையிலான பாமகவை அங்கீகரித்து இருக்கிறது. இனி தேர்தல் ஆணையம், நீதிமன்றம் மூலம் ராமதாஸ் எடுக்கும் நடவடிக்கை, அதற்கு கிடைக்கும் பலனை பொருத்தே அன்புமணி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கா - தம்பி மட்டுமல்ல சம்பந்தி
ராமதாசின் மூத்த மகள்தான் காந்திமதி. இவருக்கு அடுத்து கவிதா என்பவரும் அன்புமணியும் உள்ளனர். காந்திமதிக்கு சுகந்தன், பிரதீபன் மற்றும் முகுந்தன் என மூன்று மகன்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகனைத்தான் அன்புமணியின் மூத்த மகள் சங்கமித்ராவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எனவே அக்கா, தம்பி என்று உறவைத் தாண்டி, சம்பந்திகளாகவும் அன்புமணியும், காந்திமதியும் இருக்கின்றனர். அக்காவின் கடைசி மகன் முகுந்தனை பாமகவிற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தே தந்தை ராமதாசுடன் மோதலில் ஈடுபட்டார் அன்புமணி. தற்போது தனது அக்கா பாமகவின் செயல் தலைவராவது அவருக்கு எத்தகைய நெருக்கடிகளை கொண்டு வரும் என்பது போகக்போக தெரிய வரும்.
மேலும் படிக்க : PMK: பாமக நிர்வாக குழுவில் ’ராமதாஸ் மகள்’ : அன்புமணிக்கு நெருக்கடி
அக்கா - தம்பி மோதல்
இதுவரை தந்தை - மகன் இடையேயான பனிப்போர் இனி அக்கா - தம்பியாக மாறப் போகிறதா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. கட்சியினை நலனை தாண்டி ராமதாஸ் குடும்பத்திற்குள் வெடித்து இருக்கும் இந்த மோதல், எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்த போகிறது என்பது சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அம்பலமாகி விடும்
=======