PMK founder Ramadoss publicly accused Anbumani's faction forging his signature 
தமிழ்நாடு

என் கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர் : அன்புமணி மீது ராமதாஸ் புகார்

Ramadoss vs Anbumani Issue Update : தனது கையெழுத்தை அன்புமணி தரப்பினர் போலியாக போட்டிருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

Kannan

ராமதாஸ் vs அன்புமணி

Ramadoss vs Anbumani Issue Update : பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி, கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. பாமக மற்றும் மாம்பழம் சின்னம் யாருக்கு சொந்தம் என உரிமை கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடி இருக்கிறது.

அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூற, சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு ராமதாஸ் தரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால், மோதல் மேலும் அதிகமாகி இருக்கிறது.

ராமதாஸ் ஆதங்கம்

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “அப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையே இப்படி பிரச்சினை நடக்கிறது என்று தமிழ்நாடே ஆச்சரியமாக பார்க்கிறது. இந்த கட்சிக்காக 46 ஆண்டுகளாக உழைத்தவரை அசிங்கமாக பேசுவதா? கண் தெரியவில்லை காது கேட்கவில்லை என்று கூறுவதா?

பொய் மூட்டைகளுடன் அன்புமணி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது அன்புமணி தரப்பு பொய் மூட்டைகளுடன் ஆஜரானது. அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

கையெழுத்திலும் போலி

அன்புமணி தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கும் ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இது ஒருநாள் அம்பலத்திற்கு வரும். எனது பெயரையோ, படத்தையோ அன்புமணி இனி பயன்படுத்தக் கூடாது. அவருக்கு அந்த உரிமை இல்லை.

அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம்

வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும். கட்சிக்காக நான் உழைத்ததை எல்லாம் சொல்லிக் காட்ட வேண்டியதுள்ளது. கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பாமகவில் எனக்கே அதிகாரம்

டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது பாமகவிற்கு தலைவர் யாருமில்லை. இதுதான் உண்மை. எனவே நிறுவனத் தலைவரான தனக்கு தேர்தல் முடிவுகளை எடுப்பதற்கான அனைத்து அதிகாரமும் உள்ளது” இவ்வாறு ராமதாஸ் பேட்டியளித்தார்.

==========================