ராமதாஸ் அறிக்கை
PMK Ramadoss Urged To TN Govt on New Bus Stand Name : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் பல இடங்களில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் விரிவுப்படுத்தபட்ட புதிய பேருந்து நிலையங்கள் புதிய பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தர்மபுரி, திண்டிவனம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு(Dharmapuri New Bus Stand) அம்மண்ணிற்கு புகழ் சேர்த்த மன்னர்கள் மற்றும் மாவீரர்களின் பெயரினைச் சூட்டுவது சிறப்பாகும்.
மன்னர்களின் பெயர்கள் சூட்ட வேண்டும்
தகடூர் (எனும்) தர்மபுரியை சங்க காலம் முதல் பிற்கால சோழர் காலம் வரை அரசாட்சி செய்தவர்கள் மழவர் பெருங்குடியில் தோன்றிய அதியமான் மன்னர்கள் ஆவர். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான தகடூர் அதியமான் பெயரை கொண்டு தர்மபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு "மழவர் பெருமகன் வள்ளல் அதியமான் புதிய பேருந்து நிலையம்" என்று பெயர் சூட்டவேண்டும்.
இதுபோல ஓய்மா நாடு (எனும்) திண்டிவனத்தை சங்க காலத்தில் அரசாட்சி செய்த "ஓய்மான் நல்லியக்கோடன்" அவர்களின் பெயரை திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்டவேண்டும்.
தமிழ் மன்னர்களுக்கு செய்யும் சிறப்பாகும்
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் சாமி நாகப்ப படையாட்சியார் பெயரை சூட்டி கௌரவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதியில் அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு இதுபோல் அந்த பகுதி மன்னர்கள் பெயர் சூட்டபட வேண்டும். இப்படி அந்தப் பகுதி வரலாற்று சிறப்புமிக்க பெயரை சூட்டுவது நாம் தமிழுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் செய்யும் சிறப்பாகும்.
தமிழக அரசு மணிமண்டபங்கள் வைக்கவில்லை
தமிழ்நாடு அரசு குறிப்பாக வடதமிழக மன்னர்களுக்கும்/ சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் சிறப்பு செய்யாமல் இருப்பதும், அவர்களின் பெயர்களை மறைப்பதும் வேதனையளிக்கிறது. சம்புவராய மன்னர்களுக்கு படைவேட்டில் மணிமண்டபம், காடவராய மன்னர்களுக்கு சேந்தமங்கலத்தில் மணிமண்டபம், வீரவல்லாள மகாராஜா அவர்களுக்கு திருவண்ணாமலையில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று நான் பல முறை கோரிக்கை வைத்தும், இதுவரை தமிழக அரசு மணிமண்டபங்கள் அமைக்க முன்வரவில்லை.
அவர்களின் பெயர்களையும் எங்கும் சூட்டபடவில்லை. இதனால் இந்த பகுதி வரலாறு மறைக்கப்படுகிறது. தமிழக வரலாற்றை வருங்கால சந்ததிகளுக்கும் கொண்டு செல்ல அந்த பகுதி மன்னர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை நகராட்சிதுறை புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு சூட்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.