PMK leader Anbumani condemned the incident, DMK councilor was hacked to death in Trichy google
தமிழ்நாடு

திமுக கவுன்சிலர் படுகொலை : 5 ஆண்டுகளில் 8,750 கொலைகள், முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும் : அன்புமணி கடும் தாக்கு!

திருச்சியில் திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

திமுக கவுன்சிலர் படுகொலை

தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ” திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியின் 11ம் வார்டு உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித் குமார் திருவெறும்பூர்- நாவல்பட்டு சாலையில் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது.

ஆளுங் கட்சியினருக்கு பாதுகாப்பில்லை

ஆளும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

யாருக்குமே பாதுகாப்பில்லை

திமுக ஆட்சியில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை உருவாக்கியது தான் அரசின் சாதனை.

சில வாரங்களுக்கு முன் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்தது.

இப்போது திருச்சி புறநகரில் திமுக கவுன்சிலரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

5 ஆண்டுகளில் 8,750 கொலைகள்

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் 8750-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆனால், இது குறித்த எந்தக் கவலையும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

வெட்கித் தலைகுனிய வேண்டும்

ஒரு மாநில அரசின் முதல் கடமை மக்களையும், சட்டம் – ஒழுங்கையும் பாதுகாப்பது தான். ஆனால், அந்த அடிப்படைக் கடமையைக் கூட நிறைவேற்றத் தவறியதற்காக முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசை இன்னும் 3 வாரங்களில் தமிழ்நாட்டு மக்களே விரட்டி அடிப்பார்கள்” என்று அந்தப் பதிவில் அன்புமணி எச்சரித்துள்ளார்.

----