தொழில் முதலீடுகள்
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ” தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொய் கூறும் திமுக அரசு
தமிழ்நாடு அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஆட்சியாளர்கள் கூறிய நிலையில், அவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தான் மிகச்சிறந்த சான்று.
ஹூண்டாய் ஆலை விரிவாக்கம்
இதில், முதன்மையானது ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கத் திட்டங்கள் ஆகும். ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கம் தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.
ரூ.20,000 கோடி ஒப்பந்தம்
இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் மகிழுந்து ஆலையை விரிவுபடுத்துவது, மின்சார மகிழுந்துகளை தயாரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
ரூ.6,180 கோடிக்கு 2வது ஒப்பந்தம்
இரண்டாவது ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. ரூ.6180 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தமும் ஹூண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பானது தான். மொத்தம் 26,180 கோடி மதிப்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
நேற்றுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டது
அப்படி இருக்கையில், ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடுகளுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே, அந்த நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான முதலீடுகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரை திமுக தொடக்கம் முதலே பொய்களைத் தான் கூறி வருகிறது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.
முதலீடுகள் செயலாக்கம் பெறவில்லை
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் இரு தொழில் முதலீடுகளை செய்ய இருப்பவை கெயின்ஸ் சர்க்யூட் இந்தியா நிறுவனம், சென்னையைச் சேர்ந்த இராதா எஞ்சினியரிங் நிறுவனம் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் முறையே ரூ.4,995 கோடி, ரூ.1500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அதேபோல், எவர்வான் கோத்தாரி நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு, ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1300 கோடி முதலீடு ஆகியவற்றுக்கும் நேற்று தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே இந்த முதலீடுகளும் செயலாக்கம் பெறவில்லை என்பதை திமுக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.
குறைவான முதலீடுகளே செயலாக்கம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றாலும் கூட, அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடுகள் மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பில் இது வெறும் 8.20% மட்டும் தான். எனவே, திமுக அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது.
உருப்படியான திட்டங்களே இல்லை
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவொரு உருப்படியான திட்டமும் செயல்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை. ஐந்தாண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் 8.20 விழுக்காட்டை மட்டுமே திமுக அரசால் ஈர்க்க முடிந்திருக்கிறது.
வாக்குறுதிகளை மறந்த திமுக
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது வெறும் 13% மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தோல்விகள் அனைத்தையும் வெற்று விளம்பரங்களின் மூலமாகவும், வெறும் ஜோடனைகள் மூலமாகவும் மூடி மறைக்க திமுக அரசு முயன்றது.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
ஆனால், அவை அனைத்தும் இப்போது அம்பலமாகி விட்டன. வரும் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
================