அன்புமணி அறிக்கை
Anbumani Ramadoss on TRB Rajaa : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் என்ற பெயரில் திமுக அரசு நடத்தி வரும் மோசடிகளை அம்பலப் படுத்தும் வகையில் சென்னையில் நேற்று நான் வெளியிட்ட, “திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள்” என்ற தலைப்பிலான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள உண்மைகளை மறுப்பதாகக் கூறி தொழில்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், பாவம், பாமகவின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவை அனைத்தையும் அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாமகவின் வெற்றி.
பொய் கோட்டையை அவரே தகர்த்துள்ளார்
தொழில்துறை அமைச்சர், நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதன்முறையாக, 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 16 விழுக்காடும் வணிக உற்பத்தியை தொடங்கியிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மொத்த ஒப்பந்தங்களில் 80 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 77 விழுக்காடும் செயலாக்கம் பெற்று விட்டதாக அவர் கட்டி வைத்த பொய்கோட்டையை இதன் மூலம் அவரே தகர்த்துள்ளார்.
பா.ம.க.வின் கணக்கு சரியாகவே இருக்கும்
தொழில் துறை அமைச்சர் கூறியவாறு 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 சதவீத முதலீடுகள் கூட முழுமையாக வரவில்லை என்பது தான் உண்மை.
இதேபோல், செயலாக்கம் பெற்று விட்டதாக தொழில்துறை அமைச்சர் குறிப்பிடும் 23% ஒப்பந்தங்களிலும் அரைகுறையாகவே முதலீடுகள் வந்துள்ளது. செயலாக்கம் பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விழுக்காட்டைக் கூறிய அமைச்சர், அவற்றின் மூலம் கிடைத்த முதலீட்டின் மதிப்பைத் தெரிவித்தால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தெரிவிக்கப்பட்ட 8.8% (ரூ.1 லட்சம் கோடி) என்ற அளவுடன் ஒத்துப் போகும். வேண்டுமானால், தொழில்துறை அமைச்சர் கூட்டிக் கழித்துப் பார்க்கட்டும், பா.ம.க.வின் கணக்கு சரியாகவே இருக்கும்.
ஒப்பந்தம் என்பது உறுதிமொழி தான்
இரண்டாவதாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பாக குறிப்பிட்டு வந்த தொழில் துறை அமைச்சர், இப்போது முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, “ஒப்பந்தம் என்பது முதலீட்டு "உறுதிமொழிகள்" தான் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்” என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அமைச்சரின் விளக்கம் அருமை
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்தத் தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது. முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் மட்டுமே இத்தகைய அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் தொழில்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
தொழில் துறை அமைச்சரே தேடி படித்து பார்க்கவேண்டும்
கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகள், அளித்த பேட்டிகள் ஆகியவற்றையும், கடந்த காலங்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் அவர் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
அப்போது தான் கடந்த காலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாளிலேயே ஒட்டுமொத்த முதலீடும் தமிழ்நாட்டு வந்து விட்டதாக கூறி வந்த அவர்கள் இருவரும் தான் அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதும், அவர்களின் நினைப்பு தான் குழந்தைத்தனமானது என்பதும் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிய வேண்டும்
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உயர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் வந்தால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன்.
ஆனால், திமுக ஆட்சியில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் குறைகளை சுட்டிக் காட்டுகிறேன். தொழில்துறை அமைச்சராக இருப்பவருக்கு மாநிலத்தின் நலனில் அக்கறையும், நேர்மையும் இருக்க வேண்டும்.
அவை இல்லாத தொழில்துறை அமைச்சரால் நிர்வகிக்கப்படும் துறையில் முதலீடுகள் வராது, மோசடிகளும், பொய்களும் தான் வரிசை கட்டி வரும். தமிழ்நாடு இப்போது இதைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
நிர்வாக ஊழல் தான் காரணம்
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திரத்திற்கும், தெலுங்கானாவுக்கு செல்வதற்கு காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் தான். தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் தொடங்கி, நிலம் ஒதுக்குவது வரை அனைத்திலும் திமுக அரசின் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றன.
பாமக நடவடிக்கை எடுக்கும்
இவை அனைத்தும் இன்னும் 3 மாதங்களுக்குத் தான். அதன்பிறகு அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில், தொழில்துறை தூய்மையாக்கப்படும். பிற நாடுகளும், பிற மாநிலங்களும் தொழில் முதலீடு செய்ய தேடி வரும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.