PMK leaderAnbumani Ramadoss on Naan Mudhalvan Scheme 
தமிழ்நாடு

’நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி : புள்ளி விவரங்களுடன் அன்புமணி

Anbumani Ramadoss on Naan Mudhalvan Scheme : தமிழக அரசால் தொடங்கப்பட்ட ’நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி அடைந்து இருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி, காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.

Kannan

தமிழக அரசின் ‘நான் முதல்வன் திட்டம்’ :

Anbumani Ramadoss on Naan Mudhalvan Scheme : இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நான் முதல்வன் திட்டம் - வரவேற்பு இல்லை :

2023ம் ஆண்டில் ஒரு லட்சத்து 35,137 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 11,865 ஆக குறைந்து விட்டதாக தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிப்பதில் உள்ள குறைகள் தான். 2023ம் ஆண்டில் திறன் பயிற்சி திட்டத்தில் சேர்ந்த 1.35 லட்சம் மாணவர்களில் வெறும் 66,537 பேருக்கு மட்டுமே வேலைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 68,600 பேருக்கு வேலைகள் கிடைக்கவில்லை.

மாணவர்களிடம் வரவேற்பு இல்லை :

எனவேதான், 2024ம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 36,584 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது. அவர்களிலும் வெறும் 8517 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன் விளைவாக நடப்பாண்டில் இத்திட்டத்தில் வெறும் 11,865 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களிலும் 796 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது.

நான் முதல்வன் திட்டம் படுதோல்வி :

புரட்சிகரமான திட்டம் என்றால், பயனடைவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இன்றைய தேதியில் கூட 5000 பேர் பயிற்சி பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் 1000 பேர் கூட பயிற்சிக்கு வருவதில்லை. நான் முதல்வன் திட்டம் படுதோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க இந்த புள்ளி விவரங்களே போதுமானவை.

முறைகேடு, குளறுபடியால் திட்டம் தோல்வி :

இவற்றை தமிழக அரசால் கூட மறுக்க முடியாது. அடிப்படையில் திறன் பயிற்சி அளித்து, படித்த இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றும் திட்டங்கள் சிறப்பானவை. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையானவை. நான் முதல்வன் திட்டமும் அத்தகைய திட்டம் தான். ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைபெறும் முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் நான் முதல்வன் திட்டத்தின் தோல்விக்கு காரணங்கள் ஆகும்.

ஒருநாளைக்கு ரூ.500 ஊதியம் போதுமா? :

நான் முதல்வன் திட்டத்தின்படி பணியில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.500 என்ற விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. பணியில் சேருபவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி தான் இந்தப் பணியை செய்ய வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால், அவர்கள் வேலையை உதறுகின்றனர். எந்த வகையில் பார்த்தாலும் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டம் வெற்றிகரமானதாக இல்லை.

விளம்பரத்திற்கு செலவழிக்கும் திமுக அரசு :

நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை, இவ்வாறு அன்புமணி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

=====