Anbumani questioned DMK government's achievement is to make Tamil Nadu where children are not live safely  
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத தமிழ்நாடு: திமுகவை விளாசிய அன்புமணி

Anbumani Ramadoss Slams DMK Government : தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Kannan

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் :

Anbumani Ramadoss Slams DMK Government : பாமக தலைவரான அன்புமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6,968 ஆக அதிகரித்திருக்கிறது. 2023ல் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்(National Crime Records Bureau) தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் 60.66% அதிகரிப்பு :

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு(Children's Women Safety in DMK Period) வந்த பிறகு 2021ம் ஆண்டில் 6064 ஆகவும், 2022ம் ஆண்டில் 6580 ஆகவும், 2023ம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது.

திமுக ஆட்சியில் 217 குழந்தைகள் படுகொலை

202-ஆம் ஆண்டில் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2022ம் ஆண்டில் 81 குழந்தைகள், 2021ம் ஆண்டில் 69 குழந்தைகள் என திமுக ஆட்சியில் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை :

தமிழ்நாடு வளர்ச்சியடைந்து விட்டது, சிசுக்கொலைகள் ஒழிக்கப்பட்டு விட்டன என ஆட்சியாளர்கள் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 28 குழந்தைகள் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்த புள்ளிவிவரங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

போதைப்பொருள் சகஜமாக கிடைக்கிறது

தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளிலும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பது, குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து தடுமாறுவது போன்றவை தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். இதற்கு காரணமான திமுக அரசு தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

முடங்கி கிடக்கும் போக்சோ வழக்குகள் :

குற்றங்களுக்கு குறித்த காலத்தில் தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றம் செய்பவர்கள் திருந்துவார்கள். அந்த விஷயத்திலும் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தமிழக மாவட்டங்களில் 53 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இதுவரை 20 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 60% போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

மேலும் படிக்க : சிறுமி - மூதாட்டி வரை பாதுகாப்பில்லை : திமுக மீது அன்புமணி தாக்கு

பாதுகாப்பாற்ற மாநிலம் - திமுகவின் சாதனையா?

தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தெய்வங்களாக போற்றப்பட வேண்டிய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்”. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி எச்சரித்துள்ளார்.

===================