PMK Leader Anbumani Ramadoss Says Government employees will not forgive DMK government Of Old Pension Scheme google
தமிழ்நாடு

திமுக அரசை அரசு ஊழியர்கள் மன்னிக்கமாட்டார்கள்- அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss on Old Pension Scheme in Tamil Nadu : நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

Bala Murugan

அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு

Anbumani Ramadoss on Old Pension Scheme in Tamil Nadu : அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இத்திட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருப்பதன் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டமே தொடரும்; பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்களுக்கான அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை ஏற்காமல் திமுக அரசு ஏமாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஆணையிட வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த போது தான், தமிழக அரசு இவ்வாறு தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசின் அப்படமான பொய்

தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணியில் சேர்ந்து, அக்டோபர் வரை ஓய்வு பெற்ற 54,000 பேரில் 51,000 பேருக்கு முழுமையான பலன்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

ஆனால், இது அப்பட்டமான பொய் ஆகும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்தவர்களில் கடந்த மார்ச் மாத இறுதி வரை 45,625 பேரும், அக்டோபர் வரை சுமார் 54,000 பேரும் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவருக்குக் கூட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்களின் பணிக்காலத்தில் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பங்களிப்பு ஊதியத் தொகை, அதற்கு இணையாக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட தொகை, அதற்கான வட்டி ஆகியவை மட்டுமே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெறும் போது வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களை இதை விட மோசமாக அவமதிக்க முடியாது

மொத்தத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது தொடர் வைப்புத்தொகை திட்டம் போன்று தான் செயல்படுத்தப்படுகிறதே தவிர, சமூகப் பாதுகாப்புத் திட்டமாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.மேலும், பங்களிப்பு தொகையை திரும்பக் கொடுக்கும் போது, இனி எந்தக் காலத்திலும் ஓய்வூதியம் கேடக மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதி வாங்கப்படுகிறது. இது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கொத்தடிமைகளாக்கும் செயலாகும். அரசு ஊழியர்களை இதை விட மோசமாக அவமதிக்க முடியாது.

கிஞ்சிற்றும் பொருத்தமற்றது ஆகும்

அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்குக் கூட அவர்கள் ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடைக் கூட வழங்கப் படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. ஓய்வூதியத் திட்டம் என்பதன் உண்மையான நோக்கமே, ஓய்வுக்காலத்திற்கு பிறகு அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வழங்குவது தான்.

ஆனால், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு, பணிக்கொடை ஆகிய இரண்டுமே வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டம் என்று கூறுவதே கிஞ்சிற்றும் பொருத்தமற்றது ஆகும்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மன்னிக்கவே மாட்டார்கள்

ஆனால், இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதில் தேவையான திருத்தங்களை செய்து செயல்படுத்தப்போவதாகவும் கூறுவதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறது,. இதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மன்னிக்கவே மாட்டார்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் தான் அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களை திமுக அரசு இரு வகைகளில் ஏமாற்றியும், துரோகமிழைத்தும் வருகிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைப்பதற்காக மூத்த இ.ஆ.ப. அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டிய அந்தக் குழு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததுடன் முடங்கிக் கிடக்கிறது.

திமுக அரசின் நிலைப்பாடு

இன்னொருபுறம், தமிழ்நாட்டில் புதிய ஒய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் தெரிவித்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தி விட்டது. ஒருவேளை ககன்தீப்சிங் பேடி குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்தாலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு ஆகும். தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதை விட மோசமான துரோகத்தை திமுகவால் செய்ய முடியாது.

நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த துரோகத்திற்கான தண்டனையை திமுகவுக்கு வரும் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வழங்குவார்கள். தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.