அன்புமணி ராமதாஸ் அறிக்கை
Anbumani Ramadoss Slams DMK on Coimbatore College Girl Rape Case : இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து 36 மணி நேரம் கழித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் மூடி மறைக்கிறார்
மாணவிக்கு நடந்த கொடுமைக்கு தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், இந்தக் கொடுமைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொடூர நிகழ்வில் தமது தோல்வியை மூடி மறைக்க முதல்-அமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
கடமையை சாதனையாக கூறி தப்ப முடியாது
மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதும் அரசு மற்றும் காவல்துறையின் அடிப்படைக் கடமைகள் ஆகும் என்று கூறியுள்ள அவர், இவற்றைக் கூட செய்ய முடியவில்லை என்றால் ஓர் அரசு அரசாகவும், காவல்துறை காவல்துறையாகவும் இருக்கத் தகுதியற்றவையாகி விடும். எனவே, குற்றவாளிகளை கைது செய்ததையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிட்டிருப்பதையும் சாதனையாகக் கூறி கடமை தவறியதிலிருந்து தப்பிக்க முடியாது என்று விமர்சித்தார்.
தொடரும் பாலியல் வன்கொடுமை
கோவையில் நடந்திருப்பது, கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய மூன்றாவது பாலியல் வன்கொடுமை ஆகும். கடந்த ஆண்டு திசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும், கடந்த ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் பதில் கூற வேண்டும்
அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இனி இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வந்தது. ஆனால், கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறித் தான் ஆக வேண்டும்.
தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளன
தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். அவற்றின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது; இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் நான் நேரில் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை. அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளன.
மு.க.ஸ்டாலின் துடைத்தெறிய முடியாது
தொடர்ந்து அடுக்குமொழி வசனங்களை பேசுவதன் மூலமாகவும், கோவையில் நடந்த கொடுமையை ’வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலை’ என்று கூறி மிகவும் எளிதாக கடந்து போவதன் மூலமாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , அவர் மீது படிந்திருக்கும் கறைகளை துடைத்தெறிய முடியாது.
அன்புமணி கோரிக்கை
ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்களிலாவது தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.