Anbumani suggested a resolution passed demanding prohibition of alcohol and drug abuse in the Gram Sabha meetings  
தமிழ்நாடு

கிராம சபை கூட்டம் : மதுவிலக்கு, போதைஒழிப்பு தீர்மானம் : அன்புமணி

Anbumani Ramadoss in Grama Sabha Meeting : தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மதுவிலக்கு, போதை ஒழிப்புகோரி தீர்மானம் இயற்றுங்கள் என்று அன்புமணி யோசனை தெரிவித்துள்ளார்.

Kannan

காந்தி ஜெயந்தி 2025 - கிராம சபை கூட்டம் :

Anbumani Ramadoss in Grama Sabha Meeting in Tamil Nadu : மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி(Gandhi Jayanthi 2025 Date) கொண்டாப்படுகிறது. அந்த நாளில் நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி, தீர்மானங்கள் இயற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கிராம சபைகள் வலுவான அமைப்பு :

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ”தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157வது பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்ச நீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மது, போதை தமிழகத்தின் பிரச்சினை :

தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சினை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.

மேலும் படிக்க : Anbumani: கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்...

மது, போதைக்கு எதிராக தீர்மானம் :

மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கா விட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

==========