PMK leader Anbumani strongly criticized DMK govt unable to stop crimes in Tamil Nadu  google
தமிழ்நாடு

”கொலைகளில் செழிக்கும் திமுக ஆட்சி” : போதையும், மதுவுமே முக்கிய காரணம்! : கடுமையாக சாடிய அன்புமணி

தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் குற்றங்கள் நிகழ்வதாகவும், அவற்றைத் தடுக்க முடியாத அரசாக திமுக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Kannan

சென்னையில் 2 பேர் படுகொலை

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ” சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பழிவாங்க படுகொலையா?

வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், சந்தோஷ் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

சுங்குவார் சத்திரத்தில் கடந்த ஆண்டு திமுக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் இந்த படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முதியவர் படுகொலை, அவர் மனைவி வன்கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஓபகவலசை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த கண்ணப்பன் என்ற 74 வயது முதியவரை கொலை செய்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது.

இந்த இரு நிகழ்வுகளிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

விசாரணை கைதி மரணம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைது ஆகாஷ் படுகொலை செய்யப்பட்ட பதட்டம் அடங்குவதற்கு முன்பாகவே முனீஸ்வரன் என்ற தானி ஓட்டுனர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் அதன் தலைவரான சிவக்குமார் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்களமான தமிழகம்

தமிழ்நாட்டில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையில் பார்த்தாலும் கொலைகளும், கொள்ளைகளும் தான் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன.

போதைு பொருளும், மதுவும் காரணம்

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற எந்தக் கொலையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் அல்ல. அனைத்தும் திட்டமிட்டும், மது போதையிலும் செய்யப்பட்ட கொலைகள் தான்.

காவல்துறை விழிப்பாக இல்லை

காவல்துறையினர் விழிப்புடன் இருந்திருந்தால் இந்தக் கொலைகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், செயலற்ற திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறை இந்தக் கொலைகளை தடுக்க திறனில்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.தமிழக கலாச்சாரம்

கொண்டாட்டங்களில் திமுக அரசு

ஒருபுறம் எங்கும் கொலைகள், எதிலும் கொலைகள் என தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் நிலையில், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் திமுக நாள்தோறும் விதவிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

திமுக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கவலையாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கவலையை போக்கும் வகையிலான தீர்ப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அளிப்பார்கள்” என்று அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

====