PMK Leader Ramadoss Statement : தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், ”என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே. தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி 37ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமகவால் மக்களுக்கு நியாயம் :
இந்த 36 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன நாம் சாதித்தோம்? என்ற வினாவை நீங்களும் எழுப்புவீர்கள், நானும் என்னை நோக்கி அதே வினாவைத்தான் எழுப்புவேன். பாட்டாளி மக்கள் கட்சியின்(Pattali Makkal Katchi) துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ – மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்றுத் தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது.
மக்கள் நலனுக்காக யாரையும் எதிர்ப்போம் :
நேற்று எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த விஷயங்களை, இன்று ஆளுங்கட்சி ஆனதும், எதிர்த்த விஷயத்துக்கே அங்கீகாரம் கொடுத்து ஆதரிக்கும் ‘இரண்டு கழக’ ங்களையும், மத்தியில் ஆண்ட காங்கிரசையும், இப்போது ஆள்கிற பாஜகவையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன்.
நாம் ஆள்கிற காலம் வரும் :
பாட்டாளி சொந்தங்களைப் பொறுத்தவரை, ‘நாம் ஆள்கிற காலம், இன்றே வந்து விடாதா அல்லது இரண்டொரு நாளில் வந்து விடாதா?’ என்ற ஆற்றாமை இருக்கத்தான் செய்யும், அதை நானும் அறிவேன். நம்முடைய கையில் ஆட்சியதிகாரம் இல்லாத போதே நாம் வென்றெடுத்திருக்கும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும், தீர்வுகளும் ஏராளம். ஆள்வோரால் கூட சாத்தியமற்ற பல்வேறு மக்கள்நலப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்து முடித்திருக்கிறது என்ற உண்மையை நமக்கு ‘எதிர் அரசியல்’ செய்வோர்கூட மறுக்க முடியாதே. தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி, பா.ம.க(PMK) என்பதை காலம், தன்னுடைய பக்கங்களில் மறக்காமல் பதிவு செய்தே வைத்திருக்கிறது.
இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுக்கும் பாமக :
வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் இடஒதுக்கீடு(Vanniyar Reservation), 3.50% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.50% இட ஒதுக்கீடு; என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது; பாட்டாளிகளின் சொந்தங்களான நாம் தான்.
அய்யாவில் எதையும் செய்ய முடியும் :
என் வாழ்நாளில் 95 ஆயிரம் கிராமங்களுக்கு நான் நடந்தே பயணம் போயிருக்கிறேன், நடந்து போய்த்தான் எளிய மக்களை அவர்கள் வாழ்விடத்திலேயே சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை என் தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன். இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மக்கள் தலையில் சுமந்து திரிகிறார்கள், அந்த சுமைகளை நீங்கள் இறக்கி வாங்கிக் கொள்ளுங்கள். எப்படித் தீர்க்க வேண்டுமோ, அப்படி தீர்க்கப் பாருங்கள், வழி தெரியவில்லையா, தைலாபுரத்துக்கு எனக்கு ஒரு போன் செய்யுங்கள், நான் தீர்க்கிறேன், நீங்கள் நம்புகிற இந்த ‘அய்யா’ வால் எதையும் செய்யமுடியும்.
மக்கள் ஆதரித்தால் வெற்றி உறுதி :
மக்களின் ஆதரவைப் பெறாமல் எப்போதுமே வெற்றி சாத்தியம் இல்லை. நம்மைப் பொறுத்தவரையில் தேர்தல் தூரத்தில் இருக்கிறது, மிக அருகில் வந்து விட்டது என்ற அரசியல் கணக்குப் போட்டு மக்கள் பணிக்கான திட்டமிடலை வைத்துக் கொள்வது இல்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொள்வர். தமிழ்நாட்டில் பா.ம.க. வின் 36 ஆண்டுகால பணியும், அதே 36 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றங்களும் ஒரே நேர்க்கோட்டில் தான் இருக்கும்.
தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பது பாமக :
தமிழ்நாட்டில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் எதிர்க்குரல் பாமசுவிடம் இருந்து தான் ஒலிக்கும். அப்படியான எதிர்க்குரலின் வேகத்தால், ஆட்சியாளர்களால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள், அரசாணைகள், திட்டங்கள் ஏராளம். அதனால் தான் மக்கள் தங்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்கான கட்சியாக பா.ம.க.வை கருதுகின்றனர். .
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது :
பாட்டாளி சொந்தங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது” இவ்வாறு கூறினார்.
-----