சேலத்தில் பாமக பொதுக்குழு
PMK Ramadoss Grandson Sukundan Speech in Salem Meeting : சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில் பேசிய அனைவரும் அன்புமணியை சாடினர். பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், ராமதாசின் பேரனும், அன்புமணியின் மருமகனுமான சுகுந்தன் பேசினார்.
எனக்கு பிடித்தது நன்றி உணர்வு
” தமிழில் எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை நன்றி உணர்வு. இங்க எல்லாரும் சுயநலத்துக்காக, கொள்ளை அடிக்கவா வந்திருக்கிறோம்? அய்யா (ராமதாஸ்) மேல இருக்கிற மரியாதைக்குதான் வந்திருக்கிறோம்..
என்னடா, கரை வேட்டி கட்டாம, ஜீன்ஸ் போட்டு வந்திருக்கேன்னு பார்க்கிறீங்களா? எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லைங்க.
அய்யாவை எதிர்க்கும் அன்புமணி
எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே வேண்டாம்னு சொல்லிட்டுதான் தொழிலைப் பார்த்துகிட்டு இருக்கிறவன் நான். ஆனால் சில விஷயங்களை பேசித்தான் ஆகணும். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் தம்பி முகுந்தனுக்கு அய்யா, பாமக இளைஞர் அணித் தலைவர் பதவி கொடுத்தாரு.. அதை ஒருத்தரு (அன்புமணி) மேடையில எதிர்க்கிறாரு..
சீன் போடுகிறார் அன்புமணி
என்னான்னு? “அவனுக்கு அனுபவம் பத்தலை.. கட்சியில சேர்ந்து 4 மாசம்தானே ஆகுதுன்னு” கால் மேல் கால் போட்டுகிட்டு மைக்கை தூக்கி அடிக்கிறாரு.. சீன் போடுறாரு.. கெத்து காண்பிக்கிறாரு.. இதை எல்லாம் யாரை வெச்சிகிட்டு செஞ்சாரு.. நம்ம அய்யாவை வெச்சிகிட்டு. இது எல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா? இதை ஒரு எதிர்க்கட்சிக்காரன்கூட பண்ணுவானா இப்படி?
அன்புமணிக்கு ஒரு கேள்வி
என் மாமாவுக்கு (அன்புமணிக்கு) ஒரு கேள்வி.. நம்ம ஒரு ப்ளாஷ்பேக் போவோமா? ஒரு சூப்பர் ப்ளாஷ்பேக் போவோம். நீங்க (அன்புமணி) கட்சியில சேர்ந்தது 2004ல். அதே 2004ல் பாமக இளைஞரணித் தலைவரானீங்க. அதே 2004ல் ராஜ்யசபா எம்.பி.யானீங்க.. அதே 2004ல் மத்திய அமைச்சராகவும் பதவி வாங்குறீங்க> என்ன ஸ்பீடு இல்ல இது?
என் தம்பி பதவிக்கு வரக்கூடாதா?
நீங்க கட்சியில சேர்ந்து ஒரே வருஷத்துல மத்திய மந்திரி ஆகலாம்.. ஆனா என் தம்பி இந்த கட்சிக்கு உழைச்சவன் பதவிக்கு வரக் கூடாதா? உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
அவுரங்கசீப் போல அன்புமணி
வரலாற்றில் அப்பாவை எதிர்த்த அவுரங்கசீப்பில் இருந்து அன்புமணி வரைக்கும் பல பேர் இருக்கிறார்கள்.. அந்த அவுரங்கசீப்.. வேறு யாரும் இல்லை.. தாஜ்மஹாலை கட்டின ஷாஜஹானின் மகன். பதவி வெறிக்காக ஷாஜஹானை சிறையில் அடைத்து சாகடித்தவர் அவுரங்கசீப். பதவி வெறி கண்ணை மறைத்தால் பெத்த தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவார்.. அவமானப்படுத்த கை கூசாது.
மக்கள் தலைவர் ராமதாஸ்
அய்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு தாத்தா மட்டுமல்ல.. என்னுடைய ஹீரோ. இந்தியாவில் பலரும் அரசியல் கட்சி தொடங்குனாங்க.. எதுக்கு தொடங்கறாங்க? மந்திரியாக, முதல்வராக கட்சி தொடங்குறாங்க.
நாற்காலிக்கு ஆசைப்படாதவர்
ஆனால் தொண்டனை எம்எல்ஏவாக்கி, மந்திரியாக்கி அழகுபார்த்தவர் அய்யா ராமதாஸ். என் மாமாவை மந்திரியாக்கினார்.. ஆனால் ராமதாஸ் எந்த ஒரு பதவியிலும் உட்காரவில்லையே.. எந்த நாற்காலி மீதும் ஆசைப்படலையே..என் மக்கள் நல்லா இருந்தா போதும் என ஆசைப்பட்ட ஒரே தலைவர் ராமதாஸ்” இவ்வாறு பேசிய சுகுந்தன் அன்புமணியை காட்டமாக விமர்சித்தார்.
===================