கஞ்சா போதையில் கொடூர தாக்குதல்
Nanguneri Double Murder Case : நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கஞ்சா போதையில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிவாளால் வெட்டிய கும்பல்
கடம்போடுவாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியது.
வெடிகுண்டு வீசி தாக்குதல்
பின்னர், நாங்குநேரி பெரும்பத்து பகுதியை வந்தடைந்த அந்தக் கும்பல், அங்குள்ள தேநீர் கடையில் பெட்ரோல் குண்டை வீசியதாக தெரிகிறது. இதனால், அங்கு இருந்தவர்கள் சிதறி ஓட முயன்ற போது, அவர்கள் மீது அரிவாளால் சரமாரியாக வெட்டியது அந்தக் கும்பல்.
இரண்டு பேர் வெட்டிக்கொலை
இந்தத் தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான், செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளி ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆறுபேர் படுகாயம்
காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, சசிகுமார், கணேசன் உள்ளிட்ட 6 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்று தனிப்படைகள் அமைப்பு
சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டு இருப்பதோடு, 9 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை தீவிர விசாரணை
கொலை சம்பவம் கஞ்சா போதையில் நடந்ததா? அல்லது சாதிய மோதலா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் சாலை மறியல்
இந்நிலையில் நாங்குநேரி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி களக்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
கிராமங்களில் பதற்றம்
இரட்டை கொலை சம்பவம் நாங்குநேரி பகுதியில் உள்ள கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அசம்பாவிதங்கள் நேரிடாமல் தடுக்க, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
=======================