ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் தவெக
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், தமிழக அரசியலில் நிலவி வந்த ஒரு முக்கிய வதந்திக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திமுக எந்த இடையூறும் செய்யாது
சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக செய்திகள் பரவிய நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்குத் தனது கட்சி எந்தவிதமான இடையூறுகளையும் செய்யாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
6 மாத கால அவகாசம்
இது குறித்து அவர் வெளியிட்ட பேட்டியில் , "தமிழகத்தில் ஒரு உடனடி அரசியல் நெருக்கடியோ அல்லது மீண்டும் ஒரு பொதுத் தேர்தலோ ஏற்படுவதை திமுக விரும்பவில்லை.
எனவே, தவெக அரசு அமைவதற்கு அடுத்த 6 மாத காலத்திற்கு திமுக தரப்பிலிருந்து எந்த முட்டுக்கட்டையும் இருக்காது" என்று குறிப்பிட்டுள்ளார்.
திட்டங்களைத் தொடர நிபந்தனை
புதிதாக அமையும் அரசு, முந்தைய திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எவ்விதத் தடையுமின்றித் தொடர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வரின் பிரதான கோரிக்கை
குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் தனது பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
வாக்குறுதிகள் குறித்த விமர்சனம்
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்குவதாக விஜய் அளித்த வாக்குறுதி நிதி ரீதியாகச் சவாலானது எனக் குறிப்பிட்டார். "நாங்கள் செய்ததைப் போல குறைந்தபட்சம் 1,000 ரூபாயையாவது தடையின்றி வழங்குங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இலவச எரிவாயு திட்டம் சாத்தியமா?
அதேபோல், ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் சாத்தியமா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். இருப்பினும், அதனைச் செயல்படுத்தினால் தாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
90% வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக அரசு
தனது ஆட்சியின் சாதனைகள் குறித்துப் பேசிய ஸ்டாலின், 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளதாகவும், நீட் தேர்வு ரத்து போன்ற சில திட்டங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தாமதமாவதாகவும் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை உறுதி செய்யும் நோக்கில் திமுக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தள்ளிப்போகும் விஜய் பதவியேற்பு விழா?
முன்னதாக தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழா இன்று காலை நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கூறியதாக தகவல் வெளியான நிலையில் பதவியேற்பு விழா இன்று நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
=====