தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்றம் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. 234 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க, நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக சுமார் 45 நாட்கள் நடைபெற்ற பிரசாரம் நேற்று மாலையோடு ஒய்ந்தது.
தலைவர்கள் பரப்புரை
தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
சென்னை மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி, சென்னை எழும்பூரில் சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், காரைக்குடியில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
வெளியாட்கள் வெளியேற்றம்
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர், வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி, வெளியூர் ஆட்களை வெளியேற்று வருகிறார்கள்.
மதுக் கடைகள் மூடல்
இந்த 48 மணி நேர அமைதி காலத்தை மதுவிலக்கு நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனால் நேற்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகள், மதுக்கூடங்களை மூடப்பட்டு இருக்கும்.
5.73 கோடி வாக்களிக்கின்றனர்
இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
300 கம்பெனி துணை ராணுவம்
தேர்தல் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இதுவரை ரூ.1,200 கோடி பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 15-ம் தேதியில் இருந்து, தலா 2,106 பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நடத்திய சோதனையில் நேற்று வரை சுமார் ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்கம், மதுபானங்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு
234 தொகுதிகளுக்கும் 136 பொது பார்வையாளர்கள், 50 காவல் பார்வையாளர்கள் மற்றும் 150 செலவின பார்வையாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்களிக்க தேவையான ஆவணங்கள்
12 ஆவணங்கள்: வாக்காளர் அட்டை இல்லாவிட்டால் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
*ஆதார் அட்டை
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அடையாள அட்டை
* புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்
* ஓட்டுநர் உரிமம்
* வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
* இந்தியக் கடவுச்சீட்டு
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
* மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
* நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
* இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை
உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
====================