உறவினர்களை பறிகொடுத்த பிரபாகரன்
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதில் பிரபாகரன் என்பவர் இரண்டு உறவினர்களை பறிகொடுத்தார். இவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறார்.
திமுக, காவல்துறை மிரட்டல்
கரூர் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற கோரி திமுக தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரபாகரன் மனுவில் பரபரப்பு குற்றச்சாட்டினை சுமத்தி இருக்கிறார்.
பாதுகாப்பு வழங்க கோரிக்கை
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரியும், தனக்கு மிரட்டல் விடுத்தவர்களை தான் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கில் இணைக்க கோரியும், தான் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் சேர்க்க அனுமதிக்க கோரியும் மூன்று மனுக்களை பிரபாகரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்
பிரபாகரன் கூறியிருப்பதாவது
கரூர் மாவட்டத்தில் 27.09.2025 அன்று மாலை நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினரான நான் (சகோதரர்) இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தேன்.
ஆயுதமேந்திய காவலர்கள்
11.10.2025-13.10.2025 க்கு இடையில், அதாவது சிபிஐ விசாரணை கோரிய மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவை ஒத்தி வைத்த தேதிக்கும் ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மனுதாரரின் வீட்டிற்கு வெளியே ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கை வாபஸ் பெற மிரட்டல்
ஆயுதமேந்திய காவல்துறையினர் (பெயர்கள் மற்றும் அடையாளம் தெரியவில்லை), தனித்தனியாகவும் கூட்டாகவும், மனுதாரருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். மேலும் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டினர்
தற்போதைய ரிட் மனுவைத் தொடர வேண்டாம் என்றும் அந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தும் தொனியில் அறிவுறுத்தினர்.
அதே நாளில், ஆளும் கட்சியான திமுக செயலாளர் எம். ரகுநாத், மனுதாரரை அணுகினார், அவர் சட்டவிரோதமாக ரூ. 20,00,000 (ரூபாய் இருபது லட்சம் ) மற்றும் ஒரு வேலை தருவதாக கூறி உடனடியாக ரிட் மனுவைத் திரும்பப் பெறுமாறு கூறினார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே, அவர்கள் அனைவரையும் ரிட் மனுவில் சேர்க்க உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்
மனுவில் பிரபாகரன் கோரிக்கை
உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உதவ வேண்டும். புகாரை பதிவு செய்ய அதிகாரிகளை நான் அணுகவில்லை, ஏனெனில் மிரட்டல் விடுக்கும் நபர்கள் அவர்களின் பின்னணியில் அதிகாரிகள் இருக்கிறார்கள். எனவே தான் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன்” என அந்த மனுவில் பிரபாகரன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
===