காங்கிரஸ் கட்சி
Praveen Chakravarty Meet TVK Vijay : திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணிக்கு போக வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மறுப்பு தெரிவித்தாலும், டெல்லியில் இருந்து திட்டவட்டமாக எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026ல் தேர்தலை முதன் முறையாக எதிர்கொள்கிறார். திமுகவை, பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் அவர், காங்கிரஸ் கட்சி பற்றி இதுவரை எந்த விமர்சனமும் செய்தது கிடையாது. அதிமுக பற்றியும் பெரிய அளவில் எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.
விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு
சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்ரவர்த்தி, தவெக தலைவர் விஜயை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பட்டினப்பாக்கம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இரண்டு பேரும் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அணி மாறுகிறதா காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால், பிரவீன் சக்ரவர்த்தி ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்.
விஜயின் கூட்டணி கணக்கு!
கூட்டணிக்கு கதவு திறந்தே இருப்பதாக கூறும் விஜய், காங்கிரஸ் கட்சியை தனது கூட்டணிக்கு இழுக்க நினைப்பதாக தெரிகிறது. இதன்மூலமாக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர முடியும் என்று அவர் கணக்கு போடுகிறார்.
யாருடன் காங்கிரஸ் கூட்டணி?
காங்கிரஸ் கட்சியினரும் திமுக கூட்டணி அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. தவெக கூட்டணியில் சேரலாம் என்று விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரவீன் சக்ரவர்த்தியும், விஜயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அரசியல் விவகாரங்கள், கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறதா? திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ராகுலின் வலதுகரம் பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி அடிப்படையில் பொருளாதார நிபுணர். சென்னையை சேர்ந்தவர். இவர் முதலீட்டு வங்கி, மைக்ரோசாப்ட், ஐபிஎம் உள்ளிட்டவற்றில் பணியாற்றியவர். அதன்பிறகு ராகுல் காந்தி நேரடியாக அவரை காங்கிரஸ் கட்சியில் இணைய கூறினார். இதையடுத்து பிரவீன் காந்தி 1017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான நபராக உள்ளார். காங்கிரஸ் தேர்தல் சார்ந்த வியூக வகுப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்.
2023ல் ராகுல் பிரிட்டன் சென்றபோது, பிரவீன் காந்தி உடன் சென்றார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் புரொபஷனல் காங்கிரஸ் (Professional Congress) மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியை நவீனப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் பிரவீன் சக்ரவர்த்தி.
தேர்தல் அறிக்கை - முக்கிய பங்கு
2024 மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை மற்றும் தேர்தல் சார்ந்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார்.
தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க காங்கிரஸ் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தனி குழுவை அமைத்தது. அந்த குழுவின் பெயர் EAGLE. அதன் உறுப்பினராகவும் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளார். இந்த குழுவினர் தான் ராகுல் காந்தியின் ஓட்டு திருட்டு தொடர்பான டேட்டாக்களை தயாரித்து வழங்கி வருகிறது.