DMDK Alliance 2026 Premalatha is undecided between which side, DMK or AIADMK, in Assembly elections, Ramadoss is waiting with a vengeance 
தமிழ்நாடு

”குழப்பத்தில் பிரேமலதா, பழிவாங்கும் ராமதாஸ்” : பரபரக்கும் களம்

DMDK DMK Alliance 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக எந்தப் பக்கம் போவது என்று பிரேமலதா முடிவெடுக்காமல் தவிக்கும் நிலையில், பழிவாங்கும் முனைப்புடன் காத்திருக்கிறார் ராமதாஸ்.

Kannan

TN Assembly Elections 2026, DMDK DMK Alliance 2026 vs AIADMK Alliance vs TVK : தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி

தற்போதைய சூழலில் தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி உறுதியாகி விட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் தான் உண்டு. அதற்கான வாய்ப்பும் குறைவு. ஏனென்றால் அதிமுகவுடன் கைகோர்க்க விஜய் தயாராக இல்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்பதில் சீமான் உறுதியாக நிற்கிறார்.

திமுக கூட்டணி

ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணியில் கடந்த மக்களவை தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன. காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் போகுமா என எதிர்பார்ப்பு இருந்தாலும், தமிழக காங்கிரஸ் தலைவர் உட்பட பலர் இதில் ஆர்வம் காட்டவில்லை.

எம்பிக்கள் சிலர் மட்டுமே தவெக பக்கம் போனால், தென் மாநிலங்களில் அது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

எனவே, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளன.

234 தொகுதிகளிலும் தவெக

தவெக தலைமையில் புதிய அணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறைந்தபட்சம் தவெக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல் தனித்துக் களம் காண்கிறது.

கூட்டணிக்கு காத்திருக்கும் கட்சிகள்

தேமுதிக, பாமக (ராமதாஸ்), ஓபிஎஸ் தரப்பு, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் எந்த பக்கம் செல்கின்றன என்பதை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

பழிவாங்க காத்திருக்கும் ராமதாஸ்

ராமதாசு, பிரேமலதா விஜயகாந்தும் தங்களது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே, திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் இருக்கின்றன.

ராமதாஸ் தரப்பு அதிமுக மற்றும் திமுக பக்கம் செல்ல முடியாமல் திணறி வருகிறது. அன்புமணி இருப்பதால் அதிமுக கூட்டணிக்கும், விசிக தடுப்பதனால் திமுக கூட்டணிக்கும் ராமதாஸால் போக முடியவில்லை.

எனவே, இருதரப்பையும் பழிவாங்கும் நோக்கில் ராமதாஸ் தவெக பக்கம் தாவலாம். அப்படி சென்றால் வட மாவட்டங்களில் திமுக, அதிமுகவின் வாக்குகளை விஜய் கணிசமாக பிரிக்க வாய்ப்புள்ளது.

இது இருகட்சிகளுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தும். சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பும் பறி போகலாம்.

பரிதவிக்கும் தேமுதிக

எதிர்பார்த்த சீட்கள் கிடைக்காததால் தேமுதிகவும் அதிமுக அல்லது திமுக கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறுகிறது. அந்தக் கட்சி 10 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக 6 தொகுதிகளை மட்டுமே தரத் தயாராக உள்ளது. கூடுதலாக ஒரு ராஜ்ய சபா சீட் தரப்படலாம்.

அதிக தொகுதிகள் எதிர்பார்ப்பு

அதிமுகவும் 8 தொகுதிகள் வரை தயாராக உள்ளது. கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் பிரேமலதா, திராவிட கட்சிகள் அலைகழித்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், திமுகவும், அதிமுகவும் தேமுதிகவை கைவிட வாய்ப்புள்ளது.

பழைய எம்எல்ஏக்கள், புதிதாக சீட் எதிர்பார்ப்பவர்கள், தனது சகோதரர் சுதீஷ், மகன் விஜய் பிரபாகரன் ஆகியோர் போட்டியிட விரும்புவதால், எந்த பக்கம் போவது என்ற முடிவை எடுக்க முடியாமல் பிரேமலதா திணறி வருகிறார்.

பிரேமலதா, ராமதாஸ் யார் பக்கம் என்ற இழுபறி நீடிப்பதால், அதிமுகவும், திமுகவும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் இருக்கின்றன. வரும் 28ம் தேதி பிரதமர் மோடி மதுரை வர இருக்கும் நிலையில், அதற்குள் அதிமுக தொகுதி பங்கீட்டை முடித்து விடும் எனத் தெரிகிறது.

===========