புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி
Gold Rates Hit Back-To-Back New Records: தங்கம், வெள்ளியில் சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. குறிப்பாக சீனா, அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருக்கிறது. அதற்கு மாற்றாக வெள்ளியையும் பொதுமக்கள் வாங்குவதால், அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம்
இதன் காரணமாக இந்தியாவிலும், இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை தங்கமும், வெள்ளியும் எட்டி வருகின்றனர். முன் எப்போதும் இல்லாத வகையில், இம்மாதம், 15ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 1 லட்சத்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், விலை சற்று குறைந்தது.
ஒரே நாளில் இருமுறை உயர்வு
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 99,840 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 231 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மாலையில், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 12,570 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்தது.
சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு
இந்நிலையில் இன்று (டிசம்பர் 23) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 13,931 ரூபாய்க்கும், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 10,650 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி
தங்கம் விலை ஒரு பக்கம் உயர்ந்து அதிர்ச்சி அளித்து வரும் சூழலில், அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்தும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, சர்வதேச விலை அப்படியே இருந்தால் வெள்ளியின் விலை அதிகளவில் உயரும்.
வெள்ளி ஒரு கிராம் ரூ.234
அதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ 2 லட்சத்து 34,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
===================