இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாடு
PM Narendra Modi Tamil Nadu Visit : தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் 19ம் (நாளை மறுநாள்) தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதில், தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்றை விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இதற்காக புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு அவர் கோவை வருகிறார். நேராக கொடிசியா வளாகம் செல்லும் பிரதமர் மோடி, இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சிறப்பாக செயல்பட்ட 18 இயற்கை விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.
வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்
பின்னர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமருக்கு, தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு(South India Natural Farming Summit 2025) சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கோவையில் பலத்த பாதுகாப்பு
பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொடிசியா சாலையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏதுவாக, சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் முழுவதும் இந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி பீளமேடு சர்வதேச விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
கோவையில் போக்குவரத்து மாற்றம்
கோவை மாநகரில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூர ஜி.டி.நாயுடு மேம்பாலமும் நாளை மறுநாள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மூடப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தானிய உற்பத்தி கண்காட்சி
இதுபற்றி பி.ஆர்.பாண்டியன்(PR Pandiyan) கூறுகையில், ‘‘இயற்கை விவசாயிகள் மாநாட்டில், விவசாயிகளின் அழைப்பை ஏற்று பிரதமர் பங்கேற்பது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் பார்வையிடுவதற்காக இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள், சிறு தானியங்க, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 16 அரங்கங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிடுகிறார்’’என்றார்.
======