providing nutritious meals to students, takes pride in expanding its breakfast scheme, naming Kamarajar AI generated
தமிழ்நாடு

”100 ஆண்டுகள், மாணவர்களுக்கான சத்துணவு திட்டம்” : நீதிக்கட்சி தொடங்கி தவெக வரை : கடந்து வந்த பாதை, முழு விவரம்..!

மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழகம், இப்போது காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, காமராஜர் பெயரை சூட்டி மகிழ்கிறது.

Kannan

கல்வி பயில உணவும் அவசியம்

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பசியால் வாடும் குழந்தைகள், பள்ளிகளுக்கு வர முடியாது. சிறுவயது முதலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

வழிகாட்டிய தமிழகம்

இதனால் இடைநிற்றலும் அதிகமாகி, கல்வி அறிவு பெறும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இந்த குறையை போக்கி, மாணவர்களுக்கு வழிகாட்டிய மாநிலம் தான் தமிழகம்.

அந்த வகையில், தமிழகத்தின் சத்துணவுத் திட்டம் (மதிய உணவுத் திட்டம்) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இந்தத் திட்டம் பல கட்டங்களாக விரிவடைந்து, இப்போது காலை சிற்றுண்டி வரை விரிவாக்கம் பெற்றுள்ளது.

1922 முதல் சத்துணவு திட்டம்

இத்திட்டம் முதன்முதலில் 1922ல் சென்னை மாநகராட்சியின் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பள்ளியில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது.

மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு

1925ல் நீதிக்கட்சி ஆட்சியில் பிட்டி. தியாகராயர் முயற்சியால் முறைப்படுத்தப்பட்டு, மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 'மதிய உணவுத் திட்டம்'

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956ம் ஆண்டு, அப்போது தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செய்தார். அமெரிக்காவின் CARE அமைப்பு உதவியுடன் இது 'மதிய உணவுத் திட்டம்' என அழைக்கப்பட்டது.

1962ல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்

1962இல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் மதிய உணவுத் திட்டப் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர். இதனால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் அடுத்தகட்டத்திற்கு விரிவடைந்து பரவலாகப் மாணவர்களை போய்ச் சேர்ந்தது.

"சத்துணவுத் திட்டமாக" - எம்ஜிஆர்

1982ம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், மதிய உணவுத் திட்டத்தை விரிவான "சத்துணவுத் திட்டமாக" (Puratchi Thalaivar M.G.R. Nutritious Meal Programme) ஜூலை 1ம் தேதி மாற்றியமைத்தார்.

1982ம் ஆண்டு ஐந்து வயது முதல் 9 வயது வரை பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

1984ம் ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஏழை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு, இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்ந்தது.

மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம்

முட்டை, பருப்பு, காய்கறிகள் மற்றும் வாரத்தில் பல்வேறு நாட்களில் சமைத்த சாத வகைகள் என குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவையை ஈடுசெய்யும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சத்துணவோடு முட்டை - கருணாநிதி

1989ல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். பள்ளிக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இரு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் இதன் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

1997 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கியப் பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

சத்துணவில் முட்டை

1998 ஆம் ஆண்டு 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2006 ஆம் ஆண்டு 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இருமுறை முட்டை வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2

2007 ஆம் ஆண்டு 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சியில் மேம்பாடு

ஜெயலலிதா ஆட்சியிலும் சத்துணவு திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.

2010 ஆண்டு 1ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கும் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

கலவை சாதம், மசாலா முட்டை

2014ம் ஆண்டு முதல் பயனாளிகளுக்குப் பலவகை கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்பட்டது.

ஸ்டாலின் ஆட்சியில் காலை உணவுத் திட்டம்

2022ம் ஆண்டு முதல் அதாவது ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றபிறகு இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டமாக மாற்றமடைந்தது

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் 37 ஆயிரத்து 447 பள்ளிகளில் படிக்கும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

8ம் வகுப்பு வரை காலை உணவு - தவெக அரசு

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அந்த வகையில் 15 ஆயிரத்து 454 பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயனடைவார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்

இந்த நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

செப்.17 முதல் திட்டம் விரிவாக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.343 கோடி ஒதுக்கீடு

ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் வருகை மற்றும் உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12.71 என்ற செலவில், 210 வேலை நாட்களுக்காக ரூ.343.55 கோடியை செலவிட நிதி அனுமதியை அரசு அளித்துள்ளது.

நூறு ஆண்டுகளில் பெரிய அளவில் பயன்

1922ல் சிறு அளவில் சென்னையில் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இன்று 100 ஆண்டுகளைக் கடந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் மாபெரும் திட்டமாக மலர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அமைக்கும் போதெல்லாம், சில முக்கிய திட்டங்களை புதிதாக பொலிவுபடுத்துவது வழக்கம். அதில் முதன்மை பெறும் திட்டம், சத்துணவு திட்டமாகும்.

========================