சேலத்தில் அனுமதி மறுப்பு
TVK Vijay Roadshow in Pondicherry : கரூர் சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைவர் விஜய் டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் மக்கள் சுற்றுப் பயணத்திற்கு அனுமதி கேட்டு இருந்தார். திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு அதிக அளவில் காவலர்கள் செல்வதால், அனுமதி தர முடியாது என்று, சேலம் மாநகர காவல்துறை கைவிரித்தது.
ரோடு ஷோ - அனுமதி கோரிய விஜய்
இதையடுத்து, டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரில் ரோடு ஷா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த விஜய் சார்பில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை நடைபெறும் ரோடு ஷோவில் விஜய் பங்கேற்று உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து விஜய் பிரசாரம் தொடர்பாக அனுமதி கேட்டனர்.
சட்டம் ஒழுங்கு - காவல்துறை?
இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார்.
ரோடு ஷோ - அனுமதியில்லை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி சத்தியசுந்தரம், “புதுச்சேரியில் வரும் 5ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடையாது. வேண்டுமானால் பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ளலாம். அதற்கான தேதி மற்றும் இடத்தை தவெகவினர் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
பொதுக்கூட்டம் - தவெக திட்டம்
எனவே, புதுச்சேரியில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்த தவெகவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விஜயுடன் கலந்தாலோசித்து விட்டு, தேதியை இறுதி செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கரூர் சம்பவத்தை கருத்தில் கொண்டே புதுச்சேரி அரசும், விஜய் நடத்த இருந்த ரோடு ஷோவிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
====