R. N. Ravi has said that serving as the Governor of Tamil Nadu was the golden age of his life. google
தமிழ்நாடு

தமிழகத்தில் பணியாற்றியது ”வாழ்வின் பொற்கால நாட்கள்” : ஆளுநர் ரவி பெருமிதம் : மக்களின் அன்பு குறித்து நெகிழ்ச்சி

தமிழக ஆளுநராக பணியாற்றியது தனது வாழ்வின் பொற்கால நாட்கள் என்று ஆர். என். ரவி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

தமிழக ஆளுநர் மாற்றம் R. N. Ravi has said that serving as the Governor of Tamil Nadu was the golden age of his life.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (மார்ச் 12 ) அன்று பொறுப்பேற்கிறார்.

தமிழக மக்களுக்கு வாழ்த்து

2021ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர். என். ரவி 54 மாதங்கள் அந்தப் பொறுப்பினை வகித்து இருக்கிறார். ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு வங்கம் செல்லும் ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

மக்கள் காட்டிய அன்பு

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன்.

வாழ்வின் ’பொற்கால நாட்கள்’

வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்களின் அயராத உழைப்பு

அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு - உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது.

அயராது உழைக்கும் இளைஞர்கள்

தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். ’செயற்கை நுண்ணறிவை’ இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள்.

மக்கள் காட்டிய அன்பு மகத்தானது

அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டே போகின்றன.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை, நீங்கள் காட்டிய அன்பு.

தமிழக மக்களுக்கு நன்றி

உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா - என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா! அன்பானவர்களே! அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

================