Railway Administration has approved the construction of a double track between Arakkonam and Chengalpattu google
தமிழ்நாடு

அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் : ரயில்வே நிர்வாகம் ஒப்புதல், ரூ.933 கோடி ஒதுக்கீடு : பொதுமக்கள் வரவேற்பு!

அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே இரட்டை வழித்தடம் அமைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

Kannan

மின்சார ரயில்கள் சேவை

சென்னை புறநகர் மாவட்டங்கள் மற்றும் சென்னையின் நகர் பகுதிகளை, இணைக்கக் கூடிய முக்கிய போக்குவரத்தாக, மின்சார ரயில்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் நீண்டநாள் ஏக்கம்

சென்னை அருகே இருக்கும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களையும், மின்சார ரயில் போக்குவரத்து சேவை இணைக்கிறது.

குறிப்பாக செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் பகுதிகளுக்கு ரயில் சேவை இருந்தாலும், போதுமான அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை, என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக பொதுமக்கள் இடையே இருந்து வருகிறது.

சென்னைக்கு செல்வோர் உயர்வு

காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காக சென்னைக்கு சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆனால் அதற்கு ஏற்றார்போல கூடுதலான ரயில் சேவை வழங்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஒற்றை ரயில் வழித்தடம் தான்.

கூடுதல் ரயில்கள் - நீடிக்கும் சிக்கல்

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே 30 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படாமல் உள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதில் சிக்கல் இருக்கிறது.

பலமணி நேரம் காத்திருக்கும் பயணிகள்

ஒற்றை ரயில் பாதை என்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் எதிர்வரும் ரயிலுக்காக பலமணி நேரம் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் பெரும் சிரமங்கள் சந்தித்து வருகிறார்கள்.

இந்த பிரச்னை பற்றி பயணிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், தன்னார்வால அமைப்புகள் இரட்டை ரயில் பாதை அவசியம் என்பதை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார்கள்.

12 ரயில் நிலையங்கள்

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே மொத்தமுள்ள 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே 12 ரயில் நிலையங்கள் உள்ளன.

அதிகரிக்கும் வருமானம்

12 ரயில் நிலையங்களிலும் அதிக அளவு வருமானம் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து, அதிகரித்து வருகிறது.

12 ரயில் நிலையங்களிலும் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 35 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மட்டும், ஆண்டுதோறும் 16 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் கூடுதல் ரயில் சேவை என்பது கனவாகவே இருந்து வந்தது.

இரட்டை வழித்தடம் அனுமதி

இந்தநிலையில்தான் பொதுமக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரயில்வே கமிட்டியின் ஒப்புதல் கிடைத்து இருக்கிறது. எனவே, அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சர்வே எடுக்கப்பட்டு, தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். முதல் கட்ட பணிகள் இரண்டு மாதத்தில் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.933 கோடி ஒதுக்கீடு

இரட்டை வழித்தடம் அமைக்க ரயில்வே நிர்வாகம் 933 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயண நேரம் குறையும்

இரட்டை வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்தால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

சென்னை வர வேண்டியதில்லை

அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல சென்னை கடற்கரை வழியை பயன்படுத்த தேவையில்லை. தக்கோலம் வழியாக செல்லக்கூடிய புறநகர் ரயில் சேவையாக இது அமையும்.

ரயில்கள் எண்ணிக்கை உயரும்

தற்போது இந்த வழித்தடத்தில் தினமும் 13 ரயில்கள் இயக்கப்படும். இந்த எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த முடியும். மேலும், சரக்கு ரயில்களையும் எளிதாக கையாள முடியும்.

====