தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது,
ராம ரவிக்குமாரும் மேல்முறையீடு
அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற சரத்துக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணை
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
மத நல்லிணக்கம் பாதிக்கப்படுமா?
3-வது நாள் விசாரணையின்போது, சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தி அரங்கநாதன் என்பவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா வாதிடும்போது, “மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் கடந்த, 1862,1902 ஆகிய ஆண்டுகளில் சிலர் தீபத்தை தர்கா அருகில் ஏற்ற முயன்றபோது அது தடுக்கப்பட்டது.
இதையடுத்து, 1994-ம் ஆண்டு தர்கா அருகில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்கா அருகில் தீபம் ஏற்றுவது மரபு கிடையாது, எனவே கோரிக்கை ஏற்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல், தர்கா சார்பில் நெல்லித் தோப்பு பகுதியில் விலங்குகளை பலியிட்டு வழிபட அனுமதிக்க முடியாது.
நூற்றாண்டு பழமையான நடை முறையை மாற்ற முடியாது, கடைபிடிக்கப்படாத புதிய மரபுகளை மத வழிபாடு எனக்கூறி சேர்க்கவும் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது” என்றார்.
பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுகிறது
“மலையில் உள்ள கோயிலுக்கு அருகேதான் 150 ஆண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகே தீபம் ஏற்றப்பட்ட வரலாறு கிடையாது, எனவே, தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
தற்போது கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் பின்னர் அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பார்கள், இது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்” என வாதிட்டார்.
கோவில் நிலத்தின் தான் கல்தூண்
ராம ரவிக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர் லக் ஷ்மண் ராஜா ஆகியோர், “தர்காவுக்கு படிக்கட்டுகள், கொடிமரம், புது மண்டபம் என அனைத்தையும் சேர்த்து 86 சென்ட் நிலம்தான் சொந்தமாக உள்ளது, ஆனால், கோவிலுக்கு 171.17 ஏக்கர் நிலம் உள்ளது, அந்த குறிப்பிட்ட கல்தூண் கோயில் நிலத்தில் அமைந்துள்ளது அதில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோருகிறோம்.
இரண்டு மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றப்படும்
தற்போது குறிப்பிட்ட கல் தூணில் விளக்கு ஏற்றும் வகையில் குழிவான அமைப்பு இருக்கின்றது அதில் நெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றினால் இரண்டு மணி நேரம் தீபம் அணையாமல் எரியும்.
தமிழகத்தில் மருதமலை, சுவாமிமலை, பழனி மலை முருகன் கோயில்களிலும் இவ்வாறுதான் தீபம் ஏற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் 2 மணி நேரம் மட்டும் அந்த குறிப்பிட்ட கல்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டு விடப்போகிறது” என தெரிவித்தனர்.
=====