Ramadass Expels Anbumani from PMK Management Body 
தமிழ்நாடு

நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம் : ராமதாஸ் தலைமையில் செயற்குழு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தனது தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Kannan

வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படும் பாமகவில், அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதல்கள், தொண்டர்களை விரக்தி அடைய வைத்துள்ளது.

தந்தை மகன் மோதல் :

பொதுவாக அரசியல் கட்சிகளில் மூத்த நிர்வாகிகள், தலைவருடன் கருத்து வேறுபாடு மோதலில் ஈடுபடுவர். இது சில நாட்கள் நீடித்தாலும், யாருக்கு அதிகாரம் என்பது தெளிவாகி விடும். ஆனால், பாமகவில் தந்தை-மகன் மோதல்தான் சிக்கலுக்கு காரணம்.

கொறடா விவகாரத்திலும் மோதல் :

யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்று தெரியாமல், நிர்வாகிகளும் தொண்டர்களும் குழம்பித்தான் போய் இருக்கிறார்கள். சட்டசபை கொறடா எம்எல்ஏ அருளை அன்புமணி நீக்கி, அவர் தொடர்வார் என்று ராமதாஸ் கடிதம் கொடுக்க ஒரே களேபரம்தான். இதனால், சட்டசபையில் பாமக உடையும் நிலை உருவாகி உள்ளது.

நிர்வாகக் குழு கலைப்பு :

பாமகவில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும், கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பு நிர்வாக குழுதான். 19 பேர் கொண்ட இந்தக்குழுவை ராமதாஸ் அதிரடியாக கலைத்து இருக்கிறார். நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கப்பட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை, ராமதாஸ் அமைத்து உள்ளார்.

அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கம் :

பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, செய்தி தொடர்பாளர் பாலு, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணி பக்கம் நிற்பதால், அவர்களும் நிர்வாக குழுவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். 50க்கும் அதிகமான மாவட்டச் செயலர்களையும் ராமதாஸ் மாற்றியுள்ளார்.

21 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார். அதில் அதில், கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ராமதாசால் நியமிக்கப்பட்ட பொதுச்செயலர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர், முன்னாள் மாநில தலைவர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அன்புமணியை விமர்சிக்க வேண்டாம் :

புதிய நிர்வாக குழுவை கூட்டிய ராமதாஸ், அவர்களிடையே பேசுகையில்,

''அன்புமணியை யாரும் விமர்சிக்க வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்சி பொறுப்பு நிரந்தரமானது. கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள். 8ம் தேதி, திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துாரில், பாமக செயற்குழு கூட்டம் நடக்கும்,'' என்று தெரிவித்தார்.

பாமக செயற்குழு, பொதுக்குழு :

இதன் தொடர்ச்சியாக பொதுக்குழுவை கூட்டவும் ராமதாஸ் திட்டமிட்டு இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, அன்புமணி நிலை என்ன என்பதை அப்போது ராமதாஸ் தெளிவுபடுத்துவார் எனத் தெரிகிறது. ராமதாசை தொடர்ந்து அன்புமணியும், புதிய நிர்வாக குழுவை அமைத்து செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

குழப்பம் தான் மிஞ்சும், ஜி.கே.மணி வேதனை :

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்திற்கு வந்திருந்த ஜி.கே. மணி பின்னர் அளித்த பேட்டியில், “ராமதாசோடு இறுதி வரை பயணம் செய்வது என உறுதியாக உள்ளேன். பாமக தமிழகத்தில் வலிமையான கட்சியாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் இரு தரப்பிலிருந்தும் வரக்கூடிய செய்திகள், கட்சியில் அனைவருக்கும் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

இந்த நிலை மாற வேண்டும், மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும். இருவரும் பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதும் தீர்வாக அமையாது. குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.ராமதாஸ், அன்புமணி என இரு சக்திகளும் ஒன்றாக சேர்ந்தால் தான் வலிமையாக இருக்கும், இல்லை என்றால் கட்சி சோர்வடையும்.” இவ்வாறு அவர் கூறினார்.

=====