பாட்டாளி மக்கள் கட்சி்யில் குழப்பம்
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. தந்தை - மகன் மோதலால், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது.
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ்
அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார் ராமதாஸ். பாமக கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தக் கூடாது; வேண்டுமானால் அவர் தனிக்கட்சி துவங்கட்டும்' என்று கட்டளையிட்டு இருக்கிறார் ராமதாஸ்.
அன்புமணி கையில் தான் கட்சி
ஆனால், இதற்கு எதிர்வினை ஆற்றி இருக்கும் அன்புமணி தரப்பு, கட்சியின் நிறுவனருக்கு நிர்வாக முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது. பாமக பொதுக்குழுவால், கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்புமணி. அவரது பதவி காலம் 2026 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது. எனவே, அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என்று வரிந்து கட்டி நிற்கிறது. கட்சியின் பெயர், கொடி, சின்னம் அனைத்தும் அன்புமணியிடம் தான் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
யார் கையில் பாமக?
பாமக பெயர், சின்னம், கொடியை இரண்டு தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுச் செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் இரண்டு தரப்பிலும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள். எனவே, யார் கையில் உண்மையான பாமக இருக்கிறது என்பதில் தொண்டர்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.
தேர்தலை ஆணையத்தை அணுகுகிறார் ராமதாஸ்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாமக பெயர், கொடி, சின்னத்தை, அன்புமணி தரப்பு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பேசிய அவரது ஆதரவாளர்கள், 'கட்சி தன்னிடம் இருக்க வேண்டும் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.ஆனால், அன்புமணி தரப்பினர், ராமதாஸ் படத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தடை கோரி, தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் முடிவு செய்துள்ளார்' என்று கூறியுள்ளனர்.
பாமக கொடி, சின்னம் முடக்கப்படுமா?
ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை அணுகினால் பாமக பெயர், சின்னம், கொடி யாருக்கு போகும்? தீர்வு கிடைக்கும் வரை முடக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பெரும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
==================