PMK Leader Ramadoss Removed PMK MLAs Who Supported Anbumani Ramadoss 
தமிழ்நாடு

’அன்புமணி ஆதரவு’ எம்எல்ஏக்கள் நீக்கம் : கெத்து காட்டும் ராமதாஸ்

Ramadoss Removed PMK MLAs : அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

Kannan

பாமகவில் ஓயாத சண்டை :

Ramadoss Removed PMK MLAs : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் - அன்புமணி சண்டை ஓய்ந்தபாடில்லை. நிர்வாகிகள் நீக்கம், நியமனம், விமர்சனம் என்று இருவரும் களமாடி வருகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியின் எல்லையில் உள்ளனர்.

சட்டசபையிலும் முட்டல், மோதல் :

சட்டசபையில், தனது ஆதரவு எம்எல்ஏ சேலம் அருளை, சட்டசபை கொறடாவாக ராமதாஸ் நியமித்தார். அதற்கு போட்டியாக, அன்புமணி தனது ஆதரவாளரான மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரை நியமித்தார். இதனால் சட்டசபையில் பாமக இரண்டாக உடைந்தது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் நிர்வாகக்குழு பட்டியலில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ்(Ramadoss Removed Anbumani), புதிய நிர்வாக குழுவை அமைத்து கூட்டத்தையும் நடத்தி காட்டினார்.

அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் :

இதுவரை வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தி வருபவர் ராமதாஸ். அவருக்கு செக் வைக்கும் வகையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தராத திமுக அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இது, ராமதாசுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் நீக்கம் :

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து 3 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக ராமதாஸ் நீக்கி இருக்கிறார். இந்த நடவடிக்கை பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதியோ, உத்தரவோ இல்லாமல், கட்சி சார்பாக எம்எல்ஏக்களோ, மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில், தன்னிச்சையாக எந்த ஒரு முடிவடையும் எடுப்பது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, ஒழுங்கீன நடவடிக்கை என கருதப்படும்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி விட்டனர் :

சமீப காலமாக பாமகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாபு ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்து வரும் செயலுக்காக, 4 பேரும் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த 4 பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை கட்சியினர் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” இவ்வாறு ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

===============