ராமதாஸ் Vs அன்புமணி மோதல்
Ramadoss' side seeking civil court accordance by Supreme Court's instructions on PMK mango symbol, shocked Anbumani : வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல், கட்சியை இரண்டாக பிளந்து விட்டது. ராமதாஸ் தனி அணியாகவும், அன்புமணி தனியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இருவருக்கும் இடையேயான முட்டல், மோதல் தேர்தல் முடிந்தாலும் ஓயாது போல இருக்கிறது.
பாமகவின் மாம்பழம் சின்னம்
பாமகவின் சின்னம் அன்புமணிக்கு தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததால், உற்சாகம் அடைந்த அவரது தரப்பு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சின்னத்தை முடக்க ராமதாஸ் தரப்பு எடுத்த முயற்சிகளும், கீழமை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன.
அன்புமணிக்கு நெருக்கடி
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தேர்தலுக்கு ஒருமாதமே இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம், மீண்டும் சின்னம் பிரச்னை அன்புமணி தரப்பிற்கு நெருக்கடியை தரும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
சின்னத்தை முடக்க ராமதாஸ் கோரிக்கை
சின்னத்தை முடக்குவது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜோய்மால்ய பக்சி, வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறையாக இருந்து வருகிறது.
குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்கு சொந்தம் என்பது தீர்மானிக்கும் வரை மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அன்புமணி தரப்பு வாதம்
அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மனுதாரர் திரும்ப பெற்றுள்ளார். மனுதாரர் ராமதாஸ் தரப்பில் சின்னம் தொடர்பாக எவ்வித தடை உத்தரவையும் பெறவில்லை.
அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதிட்டார்.
உச்ச நீதிமன்றம் கேள்வி?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது.
ராமதாசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
இந்த விவகாரத்தில் உரிய மனுவை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தினார். புதிய மனுவை அவர் தாக்கல் செய்யும்போது, அந்த மனு மீது 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மூன்று நாட்கள் கெடு விதித்து இருப்பதால், அதற்குள் சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அன்புமணி தரப்புக்கு நெருக்கடி
எனவே, அன்புமணி பாமக சின்னத்தை பயன்படுத்த முடியுமா? அல்லது தேர்தல் வரை சின்னம் முடக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அப்படி சின்னம் முடக்கப்பட்டால், அன்புமணி தரப்புக்கு அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். தனிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டி இருக்கும்.
====