தமிழக சட்டமன்ற தேர்தல்
PMK MLA Arul Meet EPS : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காட்சிகளும், நிலைப்பாடுகள் அடிக்கடி மாறி வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி மோதல் காரணமாக நிர்வாகிகளும், தொண்டர்களும் பிளவுபட்டு நிற்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி
இதில் அன்புமணி முந்திக் கொண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்று விட்டார். கட்சியும், சின்னமும் அன்புமணிக்கே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டதால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
தவிக்கும் ராமதாஸ் தரப்பு
நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி பார்த்த ராமதாஸ் தரப்பு, மாம்பழ சின்னம் தங்களுக்கு கிடைக்காது எனத் தெரிந்து விரக்தியில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பால், திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
தனிக்கட்சி - ராமதாஸ் யோசனை
விஜய் கட்சிக்கு செல்லவும் ராமதாஸ் தயங்குகிறார். எனவே, சட்டமன்ற தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்தித்தாலும், யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
அன்புமணி இருப்பதால் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரையும் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள்
அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டாலும், மேலும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ராமதாஸ் தரப்பு பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளையும் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எடப்பாடியுடன் பாமக அருள் சந்திப்பு
இந்நிலையில் பாமக ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
கூட்டணி சம்பந்தமாக ராமதாஸ் இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தற்போது அவரது தரப்பு எம்எல்ஏ அருள், இபிஎஸ்ஸை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் ராமதாஸ்?
இதன் மூலமாக என்டிஏ கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையலாம் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து என்டிஏ கூட்டணியில் ராமதாஸ் தனித்து போட்டியிடுவாரா அல்லது அன்புமணியுடன் சமரசம் ஆகி, ஒரே பாமக களத்தை சந்திக்குமா என்பது போகத் போகத்தான் தெரியும்.
ஜி.கே. மணி எந்தப் பக்கம்?
அதிமுக கூட்டணிக்கு வர ராமதாஸ் முடிவு எடுத்தால், திமுகவின் தீவிர ஆதரவாளரான ஜி.கே. மணி என்ன செய்வார்? ஏற்கனவே, அவர் துரோகி என்று அன்புமணி விமர்சித்து வருகிறார். ஆகவே, இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பை இல்லை. அப்படிப்பட்ட சூழலில் அவர் திமுக பக்கம் சாய்வாரா என்ற கேள்வியும் முன்வக்கப்படுகிறது.
மதுரையில் என்டிஏ கூட்டம்
மார்ச் 1ம் தேதி தேசிய ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெறவுள்ள நிலையில், ராமதாஸும் மேடைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
=============