பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பங்குகள் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை, 2% அடிப்படை பங்குகள் மற்றும் 1% கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உட்பட மொத்தம் 3% வரையிலான 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து தனது கடிதத்தில் வருத்தத்தைத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், என்.எல்.சி. நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக முழுமையாக ஆட்சேபிக்கிறது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டோடு இரண்டறக் கலந்த என்.எல்.சி.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதாக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்துறையின் தலைமையகம் நெய்வேலியில் அமைந்துள்ளதுடன், அதன் முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளான சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-II மற்றும் முக்கிய நிலக்கரி சுரங்க முகப்பு சார்ந்த அனல் மின் நிலையங்களும் தமிழ்நாட்டிலேயே அமைந்துள்ளன.
மாநில அரசுக்கு உரிமை உள்ளது
மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் முழு ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில்தான் பல தசாப்தங்களாக இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதனால், இத்தகைய பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்து
என்.எல்.சி. என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு சாதாரண நிறுவனம் மட்டுமல்ல, அது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களைக் கடந்து, மாநிலத்தின் நீண்டகால நலன்கள் மற்றும் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை பாதிப்பதாக அமையும் என முதல்வர் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்
மாநிலத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள், தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்க வேண்டும்.
எனவே, என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ’இந்திய அரசு’ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் எனத் தாம் உளப்பூர்வமாக நம்புவதாகவும் முதல்வர் விஜய் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசு, இந்த ஆட்சியில் இந்திய அரசு
கடந்த திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு என்ற சொல்லைத் தவிர்த்து ஒன்றிய அரசு என பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில் முதல்வர் விஜய் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசுக்கு என்ற சொல்லைத் தவிர்த்து ‘இந்திய அரசு’ என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
=====