கரையை கடந்த சென்யார் புயல்
IMD Weather Forecast in Tamil Nadu : வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகி வலுப்பெற்ற சென்யார் புயல், மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தோனேஷியாவில் கரையை கடந்தது. இதன் காரணமாக இந்தோனேஷியாவில் கொட்டித் தீர்க்கும் மழையால், பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
வலுப்பெற்ற தாழ்வுப்பகுதி
இந்தநிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் - இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
புயல் சின்னம் - தமிழகம் நோக்கி...
அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை
கடலோர தமிழகத்தில் 28ம் தேதி அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை
வட தமிழகத்தில் 29ம் தேதி அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை(Chennai Rain), காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என வானிலை மையம் கணித்துள்ளது.
==========================