Reflection of suburban train cuts due to Egmore Station Renovation - Statistics released by CMRL on metro congestion google
தமிழ்நாடு

புறநகர் ரயில் குறைப்பு பிரதிபலிப்பு - மெட்ரோ கூட்டம் குறித்து சிஎம்ஆர் வெளியிட்ட புள்ளிவிவரம்!

CMRL Report : எழும்பூர் ரயில் நிலையம் மறு சீரமைப்பு காரணமாக, புறநகர் ரயில்கள் குறைக்கப்பட்டதால் மெட்ரோவில் வலிந்த கூட்டத்தின் எண்ணிக்கை குறித்து சிஎம்ஆர் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

Baala Murugan

ரயில்வே நிர்வாகத்தின் முடிவுகள்

CMRL Report : சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் திடீர் குறைப்பு, சென்னையின் போக்குவரத்து முறையையே தலைகீழாக மாற்றியுள்ளது. வழக்கமாக புறநகர் ரயிலில் பயணிக்கும் மக்கள், கட்டாயத்தின் பேரில் சென்னை மெட்ரோ ரயிலை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை சீராக நடத்துவதற்காக, ரயில்வே நிர்வாகம் சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

அலைமோதும் கூட்டம்

அதாவது, சென்னை பீச் தொடங்கி தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முன்பு தினமும் 204 ரயில்கள் இந்த பாதையில் இயங்கின. இப்போது அது 160 ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 44 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலை ஏப்ரல் 5 வரை அதாவது சுமார் 45 நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலில் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. குறைந்த ரயில்களில் அதிக மக்கள் திணிக்கப்பட்டதால், தள்ளுமுள்ளு, காத்திருப்பு என நிலைமை மோசமானது. தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாகுவதால், இனி புறநகர் ரயிலையே நம்ப முடியாது என்று முடிவு செய்த பலர், மாற்று வழியாக சென்னை மெட்ரோ ரயிலை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் 3 நாட்களாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

கடந்த 20ம் தேதி முதல் தாம்பரம்-எழும்பூர் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் வழக்கமாக அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பை சேர்ந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்றாலும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். எனவே, மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சிஎம்ஆர் வெளியிட்ட தகவல்கள்

வெள்ளிக்கிழமை (21ம்தேதி) அன்று சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. சிஎம்ஆர்எல் நிர்வாகம் வெளியிட்ட தரவுகள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வழக்கமான நாட்களில் மெட்ரோவில் சுமார் 3.6 லட்சம் முதல் 3.7 லட்சம் பேர் பயணிப்பார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 3.99 லட்சம் பேர் அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்தனர். இது ஒரு நாளில் ஏறத்தாழ 30,000 கூடுதல் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎம்ஆர் வெளியிட்ட தகவல்

விமான நிலைய மெட்ரோவில் வழக்கமாக 18,000 பேர் பயணிக்கும் விமான நிலைய மெட்ரோவில் 23,385 பேர் பயணித்தனர். இது 5,000க்கும் அதிகமான கூடுதல் பயணிகள். அதைப்போல், கிண்டி மெட்ரோவில், வழக்கமாக 16,000 முதல் 17,000 பேர் பயணிக்கும் கிண்டி மெட்ரோ நிலையத்தில், வெள்ளிக்கிழமை 21,260 பேர் பயணித்தனர். இது சுமார் 5,000 பேர் அதிகம். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழக்கமாக 28,000 முதல் 30,000 பேர் வரை பயணிப்பார்கள். சிஎம்ஆர் வெளியிட்ட இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சி தந்துள்ள நிலையில், பலரும் தங்களின் போக்குவரத்தை இருசக்கர வாகனங்கள், கார்கள் என மாற்றி நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட நேரத்திற்கு தங்களின் இடத்திற்கு செல்ல முற்படுகின்றனர்.

பயணிகள் தரப்பில் கோரிக்கை

வெள்ளிக்கிழமை அன்று 37,144 பேர் பயணித்தனர். ஏன் இந்த மூன்று நிலையங்களில் மட்டும் கூட்டம் அதிகரித்தது என்றால், இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. கிண்டி, சென்னை சென்ட்ரல், சென்னை விமான நிலையம் ஆகிய மூன்று இடங்களிலும் மெட்ரோ நிலையமும், புறநகர் ரயில் நிலையமும் மிக அருகில் உள்ளன. எனவே, புறநகர் ரயிலை விட்டு வந்த பயணிகள் இந்த நிலையங்களில் நேரடியாக மெட்ரோவை பிடித்தனர்.

இதனால் மூன்று நிலையங்களிலும் கூட்டம் திணரும் அளவிற்கு அதிகரித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த சிஎம்ஆர்எல் நிர்வாகம் உடனடியாக இரண்டு கூடுதல் ரயில்களை இயக்கியது. இதனால் சற்று நிம்மதி கிடைத்தது என்றாலும், பயணிகள் இன்னும் அதிக ரயில்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஏப்ரல் 5ம் தேதி வரையாவது அதாவது புறநகர் ரயில் சேவை சீரடையும் வரை மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை மற்றும் நேர இடைவெளியை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.