தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்ட நிலையில், விஜயின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
தவெக வேட்பாளர் அருண்குமார்
ஆனால், எடப்பாடியில் தவெகவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. எடப்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அருண்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நிறுத்தப்படும் வேட்பாளர் என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது.
வேட்புமனு நிராகரிப்பு
ஆனால், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருக்கு முன்மொழிந்த நபர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மாயமான வேட்பாளர்?
முன்னதாக தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமாகி விட்டதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தவெக நிர்வாகிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிப்பு
பொதுவாக வேட்பாளரோடு மாற்று வேட்பாளர் ஒருவரும் மனுத்தாக்கல் செய்வார். ஒருவேளை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால், மாற்று வேட்பாளர் சம்பந்தப்பட்ட கட்சி சார்பாக போட்டியிடுவார்.
ஆனால், எடப்பாடி தொகுதியில் தவெக மாற்று வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக மனு பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே இதற்கு காரணம்.
எடப்பாடியில் தவெக போட்டியில்லை
இதன் காரணமாக எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக உள்ள எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக 233 தொகுதிகளில் மட்டுமே தவெக போட்டியிடுகிறது.
=======