Removal of Nemmeli project plaque: "It reveals the 'TVK government's' fear," condemns DMK! DMK ,x.com
தமிழ்நாடு

நெம்மேலி திட்ட கல்வெட்டு அகற்றம் : ”தவெக அரசின் பயபீதியையே காட்டுகிறது” : திமுக கண்டனம்! : அதிகாரிகள் விளக்கம்...

சென்னை நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுக குற்றம் சாட்டிய நிலையில், அது பராமரிப்புப் பணி மட்டுமே என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Kavitha prasanna

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதார திட்டங்களில் ஒன்றான நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது அலகு கல்வெட்டு தொடர்பாக, தி.மு.க மற்றும் தற்போதைய த.வெ.க அரசுக்கு இடையே புதியதொரு சர்ச்சை வெடித்துள்ளது.

தி.மு.க-வின் எக்ஸ் தளப் பதிவு மற்றும் கண்டனம்

நெம்மேலி திட்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாகக் கூறி தி.மு.க தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது.

கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் தொடங்கிய திட்டம்

சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கடந்த 2006-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில், அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆகியோரால் இத்திட்டம் சிறப்பாகத் தொடங்கப்பட்டது.

2024 -ல் மீண்டும் அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 24-02-2024 அன்று இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டி வைத்தார்.

முதல்வர் விஜய் பார்வையிட வருகை?

தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்த இரண்டாம் அலகு திட்டத்தை தற்போதைய முதல்வர் விஜய் நேரில் பார்வையிட வருகிறார் என்ற காரணத்திற்காக, முந்தைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் நாட்டிய கல்வெட்டை த.வெ.க அரசு அகற்றியுள்ளதாக தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.

தவெக அரசின் பயபீதியையே காட்டுகிறது

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் புதிய திட்டங்களை உருவாக்காமல், முந்தைய அரசின் திட்டங்கள் மீது தங்களின் அடையாளத்தை ஒட்டுவதற்காக கல்வெட்டை அகற்றுவது தற்போதைய அரசின் பயபீதியையே காட்டுகிறது என தி.மு.க தரப்பில் சாடப்பட்டுள்ளது.

துறை அதிகாரிகளின் விளக்கம்

தி.மு.க-வின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, நெம்மேலி திட்டக் கல்வெட்டு எதுவும் அகற்றப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.

அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது

"நெடுஞ்சாலை ஓரமாக வைக்கப்பட்டிருந்த அந்தத் திட்டத்தின் கல்வெட்டானது லேசான சேதமடைந்த நிலையில் இருந்தது.

கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், கடந்த 10 நாட்களாக அதன் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மற்றபடி கல்வெட்டு அகற்றப்படவில்லை." என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

====