சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவு :
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ‘செழுமை கருவூலம்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, பணிகளை கண்காணிக்கும் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான வி.பாரதிதாசன் மற்றும் ஏ.செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் நடைபெறும் சீமைக்கருவேல மர அகற்றும் பணிகளை நேரடியாக கண்காணித்து, அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறுப்புக்காக நீதிபதி வி.பாரதிதாசனுக்கு மாதம் ரூ.3 லட்சம் ஊதியம் வழங்க அரசு முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்தத் தொகையை தாம் பெற விரும்பவில்லை என்றும், அதனை சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்கே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது இந்த முடிவு சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.
சீமைக்கருவேல மரங்கள் (Prosopis Juliflora) தமிழகத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகின்றன.
இவை நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதுடன், இயற்கை தாவர இனங்களின் வளர்ச்சியையும் பாதிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாகவே மாநிலம் முழுவதும் இந்த மரங்களை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீமைக்கருவேல மர அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகக் கருதிய சென்னை உயர்நீதிமன்றம், தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க தமிழக அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, தனக்கான மாத ஊதியத்தையே துறந்து திட்ட வெற்றிக்காக செயல்பட முன்வந்துள்ள நீதிபதி வி.பாரதிதாசனின் நடவடிக்கை தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
====================