Chennai Metro Fine Raised Up To 2500 For Creating Disturbance Jan Viswas Act
சென்னை மெட்ரோ இரயில்கள் மற்றும் அதன் வளாகங்களில் பயணிக்கும் பயணிகள், தங்களது சக பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மெட்ரோ நிர்வாகம் விரிவான புதிய வழிகாட்டுதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தண்டனைக்குரிய குற்றங்கள் எவை?
மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் அமைதியான பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக தடைசெய்யப்பட்ட செயல்கள்
அலைபேசியில் (Mobile Phone) மற்றவர்களுக்கு கேட்கும் வகையில் உரத்த குரலில் உரையாடுதல்.
இயர்போன் அல்லது ஹெட்போன் என்று சொல்லப்படும் செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கி இல்லாமல், உரத்த சத்தத்தில் இசை கேட்பது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது.
அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலோ அல்லது அதன் வளாகங்களிலோ ஸ்பீக்கர் மோட் வசதியைப் பயன்படுத்துதல்.
ரூ.500 முதல் ரூ.2,500 ஆக உயர்ந்த அபராதம்
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த 19.06.2026 அன்று வெளியிட்ட புதிய அரசிதழ் (Gazette) அறிவிப்பின்படி, 'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் ஒரு முக்கியத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, இனிவரும் காலங்களில் ஹெட்போன் இல்லாமல் உரத்த சத்தத்தில் பாட்டு கேட்பது, ஸ்பீக்கரில் பேசுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகை, பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரை ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோவிலிருந்து உடனடியாக வெளியேற்றம்
அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி, இந்த விதிமுறைகளை மீறி சக பயணிகளுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் பயணிகள், மெட்ரோவின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ இரயில் அல்லது மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்
எனவே, அனைவரும் சக பயணிகளின் நிம்மதியான பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அலைபேசிகளைப் பயன்படுத்தும் போது கட்டாயம் செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துமாறும், உரத்த குரலில் பேசுவதையும் ஸ்பீக்கர் பயன்பாட்டையும் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
======