Minister Nirmal Kumar Allegations Against DMK Senthil Balaji TVK MLA Bribe
தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க திமுக சதி செய்வதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
ரூ.50 கோடி பேரம் – ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தவெக அரசை சீர்குலைக்க திமுக தொடர்ந்து முயன்று வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது
எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக முயற்சி
எங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியை திமுக தற்போதும் தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகிறது. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க திமுக மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன.
பணத்தை கைப்பற்றும் முயற்சியில் அரசு
இந்த சதித் திட்டம் தொடர்பாக ஏற்கனவே ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக திமுக மற்றும் செந்தில் பாலாஜி சார்பாக கொடுக்கப்பட்ட பணம் ஆங்காங்கே பதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த குதிரை பேர முயற்சியை மு.க.ஸ்டாலின் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றார்.
திமுகவின் கணக்கு?
மேலும், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த தவெக அரசைப் பதவி நீக்கம் செய்துவிடலாம் என திமுக கணக்கு போடுவதாகவும் அவர் சாடினார்.
"பாஜக பின்னால் இருக்கிறதா?" – அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கேள்வி
திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா எப்போது வேண்டுமானாலும் மத்திய அமைச்சராகலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதன் மூலம் "எங்களுக்கு பின்னால் பாஜக இருக்கிறது, நாங்கள் அசைக்க முடியாத சக்தி" என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூற வருகிறாரா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
பழநி கோயில் நில மோசடி – சிபிசிஐடி விசாரணை
பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், இதில் விரிவான விசாரணை தேவை என்றார்.
போலி பத்திரப்பதிவு - அரசு சந்தேகம்
மேலும் பழநியில் மட்டுமல்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் பல இடங்களில் கோயில் இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் போலிப் பத்திரப் பதிவுகள் நடந்துள்ளதாக அரசு சந்தேகிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப் பதிவு மோசடி தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தவெக அரசு அமைந்த பிறகுதான் பழநி நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அழைப்பு
இதுபோல் வேறு எங்கேனும் போலி பத்திரப் பதிவு நடைபெற்றிருப்பது தெரிந்தால் பொதுமக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரலாம், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம் எப்போது?
மின்துறை அமைச்சரான நிர்மல் குமார், தனது துறை சார்ந்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதன்படி, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
துல்லியமான விவரங்களுக்காக காத்திருப்பு
மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற துல்லியமான விவரம் தெரிந்த பிறகுதான், அவர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து ஒரு இறுதி முடிவுக்கு வர முடியும் என்றார்.
மேலும், டிஎன்பிஎஸ்சி வழியாகத்தான் அரசுப் பணியாளர்களை நியமிக்க முடியும் என்ற பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதால், அரசு அனைத்து விதிகளையும் பின்பற்றி சட்டப்படி மட்டுமே செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
=====